உத்தரபிரதேசம்,  உத்தராகண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப், கோவா  ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் பஞ்சாப் மாநிலத்தை தவிற மீதமுள்ள 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தல் முடிவு வரும் 2024ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரதமர் அரியாசனம் யாருக்கு என்பதை நிர்ணயம் செய்யும் ஒன்றாகவே அரசியல் ரீதியாக பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் இந்தியாவில் அதிக மக்களவை தொகுதிகளைக் கொண்டது உத்திரபிரதேச மாநிலம்தான். இந்த மாநிலம்தான் பிரதமர் பதவி யாருக்கு என்பதை முடிவு செய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியின் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு காலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்த உத்திரபிரதேசம் தற்போது பாஜகவின் அரண்மனையாக மாறியுள்ளது. ஆனால், கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தனித்து பெற்ற வாக்குகளை விட இந்த தேர்தலில் பாஜகவிற்கான வாக்கு வங்கி குறைந்திருக்கிறது என்பதையும் காண முடிகிறது. கடந்த உ.பி சட்டப்பேரவை தேர்தலில் எளிதாக 300 சீட்டுகள் கைப்பற்றிய பாஜக இந்த தேர்தலில் 250 தாண்ட தட்டி தடுமாறியுள்ளது. 50 சீட்டுகளுக்கு மேல் பாஜக இழந்துள்ளது. பாஜகவின் இந்த அதிருப்தி வாக்குகள் சரியான முறையில் எதிர்கட்சிகள் கைப்பற்றி இருந்தால் அது பாஜகவிற்கு மேலும் நெருக்கடியாகவே அமைந்திருக்கும். 


மேலும் படிக்க | UP Election Result 2022 Live: 267 இடங்களில் பாஜக முன்னிலை


பாஜகவிற்கு ஏன் பின்னடைவு., 


மத ரீதியான அரசியல் உத்திரபிரதேசத்தில் பாஜகவிற்கு கை கொடுத்திருந்தாலும், பிற மாநிலங்களில் அது எடுபடவில்லை. அதேபோல, வேளாண் சட்ட திருத்த மசோதா, விவசாயிகள் மீது மத்தியில் உள்ள பாஜக அமைச்சரின் மகன் கார் ஏற்றி கொன்ற விவகாரம். நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, குடியுறிமை சட்ட திருத்த மசோதா, தமிழகத்தில் நீட் தேர்வு, வேலை இல்லா திண்டாட்டம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் மத்திய பாஜக அரசுக்கு மாநிலங்கள் வாரியாக மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிருப்திதான் கடந்த தேர்தலில் பாஜக பிடித்த சீட்களில் சரிவை ஏற்படுத்த காரணமாக அமைந்துள்ளது. 



காங்கிரஸ் தலைதூக்குமா..!


தேசிய அளவில் மிகப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது தடம் தெரியாத அளவுக்கு தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் மாநில கட்சிகளை காங்கிரஸ் ஆதரிக்காமல் போனதுதான்.  தலைமை தனக்கு வேண்டும் என்ற நிலைபாட்டில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியே வரவேண்டும். இதன் தொடர்சியாக மாநில கட்சிகளாக உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் கொள்கையில் உடன்பாடு ஏற்படுத்தி, தேர்தல் நிலைபாட்டில் மாற்றத்தை கொண்டு வந்து கூட்டணி அமைத்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சியால் இனி அரசியலில் நிலைத்து நிற்க முடியும் என்ற சூழல் உருவாகியுள்ளது. 


2024 மக்களவை தேர்தலில் வெற்றி யாருக்கு


மத்திய பாஜக அரசுக்கான ஆட்சி காலம் இனியும் 2 ஆண்டுகள் உள்ள நிலையில் 2024ஆம் ஆண்டு மக்களவைக்கான தேர்தல் நடைபெறும். உத்திரபிரதேச மாநிலத்தின் இந்த வெற்றி பிரதமர் இருக்கையை முடிவு செய்யும் என்ற நிலைபாடு ஒரு பக்கம் இருந்தாலும், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் நிலைபாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தி மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டால் தேர்தல் முடிவு மாற வாய்வு அதிக அளவில் உள்ளது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 


கோவாவை பொறுத்தவரை, பாஜக 33.4 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அதே நேரம் காங்கிரஸ் 23 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. அதேபோல, பிற கட்சிகள் 19. 3 சதவீதம், 7.9 சதவீதம் என வாக்குகள் பெற்றுள்ள நிலையில் தேசியவாத காங்கிரஸ் 1.11 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ளது அதை விட அதிகமாக நோட்டா 1.12 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | Punjab Election Results 2022 Live: பஞ்சாபில் கொண்டாட்டத்தை ஆரம்பித்த ஆம் ஆத்மி


மணிப்பூர் மாநிலத்தை பொறுத்தவரை பாஜக 37.2 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி 16.1 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது, அதேபோல தேசிய மக்கள் கட்சி 15.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. பிறக்கட்சிகள் தொடர்சியே வாக்குகளை பெற்றுள்ளன. 


பாஞ்சாப் மாநிலத்தில் தேசிய கட்சியாக உருவெடுத்து வரும் ஆம்ஆத்மி 42.2 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. காங்கிரஸ் 22.9 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 6.54 சதவீதம் வாக்குகளையே பெற்றுள்ளது. 


உத்திரபிரதேச மாநிலத்தில் 42.3 சதவீதம் வாக்குகள் பெற்று பாஜக பெரும்பான்மை வெற்றியை உறுதி செய்துள்ளது. அதேநேரம், சமாஜ்வாதி 31.6 சதவீதத்திற்கும் மேல் வாக்குகளை பெற்றுள்ளது. பகுஜன் சமாஜ் 12.7 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. 


உத்திரகண்ட் மாநிலத்தில் பாஜக 44.1 சதவீதம் வாக்குகள் பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 39 சதவீதம் வாக்குகளை பெற்றுள்ளது. 


1.30 மணி நிலவரப்படி இந்த வாக்கு எண்ணிக்கை சதவீதத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி பார்க்கும்போதே காங்கிரஸ் மற்றும் பிற மாநில கட்சிகள் கூட்டணி வைத்து மக்களவை தேர்தலை எதிர்கொண்டால் காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு மாற்று கட்சியின் பிரதிநிதி பிரதமர் இருக்கையில் அமரும் சூழல் உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | தேர்தல் கணிப்புகளை கலாய்த்த தயாநிதி அழகிரி - லைக் செய்த வெங்கட்பிரபு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR