டெல்லி சட்டசபை தேர்தல்: 62.59 சதவீதம் வாக்குப்பதிவு
டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. புதிய அரசை தேர்ந்தெடுப்பதற்காக, நேற்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு தொடங்கிய காலை 8 மணி முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி, முன்னாள் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால், சாந்தினி சவுக் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அல்க்கா லம்பா, பாஜக எம்.பி. மீனாட்சி லேகி உள்ளிட்டோர் வாக்குகளை பதிவு செய்தனர். புது டெல்லி தொகுதியில் போட்டியிடும், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.
மொத்தம் 61.46 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது. ஆனால், தேர்தலில் மொத்தம் பதிவான வாக்கு சதவீதம் குறித்த விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை.
இந்நிலையில், டெல்லி தலைமைத் தேர்தல் ஆணையர் ரன்வீர் சிங் இன்று மாலை 7 மணிக்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
டெல்லியில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலைக் காட்டிலும் இது 2 சதவீதம் கூடுதலாகும். அதிகபட்சமாக பல்லிமாரன் சட்டசபை தொகுதியில் 71.6 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக டெல்லி கன்டோன்ட்மன்ட் சட்டசபை தொகுதியில் 45.4 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது" என்றார்.