ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்பட்டதாக வந்த புகார் தவறு-மத்திய அரசு உறுதி!!
ஆதார் தொடர்பானத் தகவல்கள் ரூ.500-க்கு விற்கப்படுவதாக வெளியான தகவலுக்கு தேசிய தனிநபர் அடையாள ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஆதார் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆதார் எண் பாதுகாப்பானது என்று தொடர்ந்து மத்திய அரசு கூறி வருகிறது.
ஒருவரின் பெயர், முகவரி, புகைப்படம், கை விரல் ரேகை, கண் விழிப் படலம் உள்ளிட்ட அங்க அடையாளங்களின் அடிப்படையில், குடிமக்கள் அனைவருக்கும் 12 இலக்க ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 100 கோடிக்கும் மேற்பட்டோருக்கு இந்த எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த விவரங்களை சில தனியார் நிறுவனங்கள் தவறாகப் பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
இந்நிலையில்,முன்னதாக பஞ்சாப் மாநிலத்தில் வெளிவரும் தினசரி நாளிதழ், நாட்டு மக்களின் ஆதார் தகவல்கள் ரூ.500 கொடுத்தால் விற்கப்படும் என சிலவற்றை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டு இருந்தது.
வாட்ஸ் குரூப் ஒன்றில் வெளியான தகவல் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது தெரியவந்ததாக குறிப்பிடிருந்தது.
அதில், வாட்ஸ் அப் நபரிடம் ரூ.500 கொடுத்து இணையதளம் ஒன்றின் ஐ.டி. மற்றும் பாஸ்வேர்டு பெறப்பட்டது. அந்த இணைப்பில் சென்று பார்த்த போது, கோடிக்கணக்கானோரின் ஆதார் எண்கள், வீட்டு முகவரி, அஞ்சலக பின் கோடு, தொலைபேசி எண்கள் மற்றும் இ-மெயில் முகவரி உள்ளிட்ட பாதுகாக்கப்படவேண்டிய தகவல்கள் அதில் இருந்துள்ளன.
இதுகுறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆதார் தகவல்கள் பாதுகாப்பானவை. ஆதார் தகவல்கள் கசியவோ, விற்பனை செய்யப்படவோ இல்லை. ஆதார் தகவல்கள் சட்ட விதிகளை மீறி யாருக்கும் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக வெளியான செய்தி தவறானது” என கூறப்பட்டுள்ளது.
ஆதார் வைத்திருப்பவரின் விழி, விரல் ரேகைப் பதிவு உள்ளிட்ட சில விவரங்களை அதிகாரிகளாலும் பார்க்க முடியாது. இந்தச் சூழலில், ஆதார் விவரங்களை கசியவிட்டு முறைகேடுகளில் யாரேனும் ஈடுபட முயன்றால் அவர்களைக் கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.