சபரிமலைக்கு செல்லக்கூடாது தடுத்து நிறுத்தப்பட்ட திருப்தி தேசாய்
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் திருப்தி தேசாய் செல்லக்கூடாது என விமான நிலையத்திற்கு வெளியே போராட்டம்.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பில் 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் தலைமையிலான அமர்வு, வருகிற ஜனவரி மாதம் 22 ஆம் தேதி முதல் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெறும் என்றும். தற்போது தடை விதிக்க முடியாது என அறிவித்தனர்.
இந்நிலையில், சமீபத்தில் சபரிமலைக்கு செல்வதற்காக ஆன்லைன் முன்பதிவு துவங்கியது. சபரிமலைக்கு செல்ல ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களில் சுமார் 500-க்கு மேற்ப்பட்ட பெண் பக்தர் பதிவு செய்துள்ளனதாக தகவல் தெரிவித்துள்ளனர். மண்டலம் மகரவிளக்குப் பூஜைக்காக வரும் நாளை முதல் அடுத்த 41 நாட்களுக்கு சபரிமலை நடை திறக்கப்பட உள்ளது.
இதனையடுத்து சபரிமலை கோவிலுக்கு தான் செல்ல இருப்பதாக பெண்ணியவாதி திருப்தி தேசாய் ஏற்கனவே அறிவித்திருந்தார். அவர் விமானம் மூலம் கொச்சி அதிகாலை 4.4௦ மணிக்கு வந்தடைந்தார். ஆனால் விமான நிலையத்துக்கு வெளியே திருப்தி தேசாய் சபரிமலை கோவிலுக்கு செல்லக்கூடாது எனக்கூறி ஏராளமானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் திருப்தி தேசாய் மற்றும் அவரது குழுவினர் கொச்சி விமான நிலையத்தில் தங்கி உள்ளனர். அங்கேயே காலை உணவை அருந்தினர்.