உ.பி-யில் விமானநிலையத்தில் அகிலேஷ் யாதவ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து இன்று ஆளுநரிடம் புகார் தெரிவிக்க உள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெள விமான நிலையத்தில் அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜவாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டார்.


உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் உள்ள அலாகாபாத் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்கள் சங்க விழாவில் கலந்து கொள்வதற்காக, லக்னெளவில் உள்ள செளதரி சரண் சிங் சர்வதேச விமான நிலையத்துக்கு செவ்வாய்க்கிழமை காலை அகிலேஷ் யாதவ் சென்றார். இந்நிலையில், அங்கிருந்து பிரயாக்ராஜ் செல்வதற்கு அனுமதிக்காமல், விமான நிலைய அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார். பிரயாக்ராஜ் நகரில் நடைபெறும் கும்ப மேளா விழாவிலும் அகிலேஷ் கலந்து கொள்ள இருந்ததாக கூறப்படுகிறது.


இதுதொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், அலாகாபாத் பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்க தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சிக்கு நான் செல்வதில் அரசுக்கு விருப்பமில்லை. அதனால்தான் பிரயாக்ராஜ் செல்வதற்கு விமானம் ஏற விடாது என்னை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். லக்னெள விமான நிலையத்தில் தற்போது உள்ளேன். இதற்குமேலும், இது போன்ற அநீதிகளை நமது நாட்டு இளைஞர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பாஜகவுக்கு தெரிய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.


அகிலேஷ் தடுக்கு நிறுத்தப்பட்டதை கண்டித்து சமாஜ்வாதி கட்சி தொண்டர்கள் மாநிலம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். பல இடங்களில் வாகனங்களின் கண்ணாடிகள் அடித்து உடைக்கப்பட்டதுடன் காவல்துறையினருடன் மோதலிலும் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பிய சமாஜ்வாதி உறுப்பினர்களும் அமளியில் ஈடுபட்டனர்.


இதனிடையே உத்தரபிரதேச சட்டப்பேரவையில் இதுகுறித்து விளக்கமளித்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அகிலேஷ் சென்றிருந்தால் பல்கலைக்கழகத்தில் இரண்டு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியதாலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். இந்நிலையில் தாம் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச ஆளுநர் ராம் நாயக்கிடம் இன்று புகார் அளிக்க இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.