கேரளாவில் பொழிந்து வரும் கனமழை காரணமாக நிரம்பியுள்ள செறுதோணி அணையின் அனைத்து 5 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கனமழை காரணமாக கேரளாவின் 22 அணைகள் நிரம்பி வழிகின்றன. முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அனைத்து அணைகளையும் ஒரே நேரத்தில் திறக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் பெரியாறு, வைக்கம், பம்பை நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


முன்னதாக 2403 அடி கொள்ளளவு கொண்ட இடுக்கி அணை நிரம்பியதை அடுத்து பாதுகாப்பு நலன் கருதி அணையின் மதகுகளை திறக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.



நேற்று மாலைவரை அணையின் ஒரு மதகு திறக்கப்பட்டு, வினாடிக்கு 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இன்று அதிகாலையில் அணையின் மேலும் 5 மதகுகள் திறக்கப்பட்டு கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.


இடுக்கி அணையை பொறுத்தவரை கடந்த 1992-ஆம் ஆண்டு அணைகள் நிரம்பி மதகுகள் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 26 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அணையை திறக்கும் அளவுக்கு நீர் மட்டம் உயர்ந்துள்ளது.


இடுக்கி அணை திறக்கப்பட்டதை அடுத்து செறுதோணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அருகில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் ராணுவத்தினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 


தற்போதைய நிலையிலும் கேரளாவில் தொடர் மழை பொழிந்து வருவதால் அணைகளுக்கு வரும் நீரின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதனால் இடுக்கி மாவட்ட மக்கள் பீதியில் உறைந்துள்ளனர்.