மெட்ரோ, அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம்: அரவிந்த் கெஜ்ரிவால்
டெல்லி முழுவதும் சிசிடிவி கேமரா மற்றும் மெட்ரோ ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பை அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
புது டெல்லி: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே இருக்கும் நிலையில், மெட்ரோ ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இரண்டு அல்லது மூன்று மாதங்களில், இந்த திட்டம் அமல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.
இன்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:-
பெண்கள் பாதுகாப்பு விசியத்தில் ஆம் ஆத்மி கட்சி எப்பொழுதும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. அதற்க்கு வலுசேர்க்கும் வகையில் வேலும் இரண்டு இரு முக்கிய முடிவுகளை டெல்லி அரசு எடுத்துள்ளது.
ஒன்று டெல்லி மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது. அதில் முதற்கட்டமாக 70 ஆயிரம் இடங்களில் கேமரா பொருத்துவது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. அங்கு சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தும் பணி ஜூன் 8 ஆம் தேதி முதல் நடைபெறும்.
மற்றொன்று மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பு. அதாவது டெல்லியில் உள்ள பெண்கள் அனைவரும் மெட்ரோ ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம். இந்த திட்டம் கொண்டுவர குறைந்தது 2 அல்லது 3 மாதங்கள் ஆகும். பொது போக்குவரத்துகளில் பெண்கள் பயணம் செய்தால் பாதுகாப்பாக இருக்கும். மேலும் பல அரசு பேருந்துகளில் கேமார பொருத்தப்பட்டு உள்ளது. வரும் நாட்களில் அனைத்து அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் எனவும் கூறினார்.
மெட்ரோ மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச சேவை வழங்குவதன் மூலமாக டெல்லி அரசுக்கு தோராயமாக வருடத்திற்கு ரூ.700 கோடி செலவாகும். அந்த செலவை டெல்லி அரசு ஏற்கும் எனவும் கூறினார்.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் உள்ள மொத்தம் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி தோல்வியை தழுவியது. மேலும் அடுத்த ஆண்டு (2020) சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. இந்தநிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின், இந்த அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெரும் என்பதில் சந்தேகமே இல்லை.