இறைச்சிக் கூட உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து உத்தரப் பிரதேச அரசு 10 நாள்களில் முடிவெடுக்க வேண்டுமென்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரபிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசு அமைத்த பின்னர் சட்ட விரோதமாக செயல்பட்ட இறைச்சி கூடங்கள் மற்றும் விற்பனை கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது, தொடர்ச்சியாக சீல் வைக்கப்பட்டது. விமர்சனங்கள் எழுந்தாலும் சட்டவிரோதமாக செயல்பட்டவை மீதே நடவடிக்கை என அரசு தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. 


இதற்கிடையே மாநிலத்தில் உரிமம் பெற்று செயல்பட்ட இறைச்சி கூடங்களின் உரிமங்களை உத்தரபிரதேச அரசு புதுப்பிக்காமல் வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநில அரசை கண்டித்து  இறைச்சி கூட உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாநில அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையுடன் உடன்பாடு எட்டப்பட்டு போராட்டம் கைவிடப்பட்டது. 


இறைச்சி கூட உரிமையாளர்கள் சார்பில் அலாகாபாத் ஐகோர்ட்டில், இறைச்சி கூடத்தின் உரிமத்தை புதுப்பித்து தர உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. 


இதனை விசாரித்த ஐகோர்ட்டு, எந்த உணவை சாப்பிடுவது என்பதும், உணவுப் பொருள் விற்பனையும் அடிப்படை வாழ்வுரிமைகளில் ஒன்றாகும். உத்தரபிரதேசத்தில் பல தரப்பட்ட உணவுப் பழக்க, வழக்கம் உள்ளது. மாநிலத்தின் மதச்சார்பின்மையில் இதுவும் ஒன்றாகும்.


சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் சட்டப்பூர்வமான விஷயங்களை மேற்கொள்வதிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும். உணவு சாப்பிடுவதும், உணவு விற்பனையும் வாழ்வாதாரப் பிரச்னை. மக்களுக்குத் தேவையான உணவு, சுகாதாரமாகக் கிடைப்பதை உறுதி செய்வது அரசின் கடமை. 


எனவே, சட்டவிரோத இறைச்சி கூடங்கள், இறைச்சி கூட உரிமங்களைப் புதுப்பிப்பது குறித்து உத்தரபிரதேச அரசு 10 நாளில் செயல்திட்டம் வகுக்க வேண்டும் என உத்தரவிட்டது.