சர்ச்சைக்குரிய டிவி தொடர்களுக்கு தடை; மாநில அரசு அதிரடி!
பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்யவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப்பில் வால்மீகி அமைப்பினரின் போராட்டம் காரணமாக வன்முறை சம்பவங்களை தடுக்க சர்ச்சைக்குரிய டிவி தொடரை தடை செய்யவுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப்பில் ஒளிப்பரப்பாகம் டிவி தொடரான "ராம் சியா கி லக் குஷ்" என்ற தொடரில் ‘தவறான கருத்துக்களை கூறுவதாகவும், வரலாற்று உண்மைகளை சிதைப்பதாகவும், தங்களின் மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் உள்ளதாகவும்’ வால்மீகி அமைப்பினர் குற்றம்சாட்டினர். இந்த சீரியலுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி, ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருந்தனர். இந்த போராட்டத்தின் போது சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன.
மேலும் ஜலந்தரில் நடைப்பெற்ற கலவர சம்பவத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து குறிப்பிட்ட இந்த சீரியலை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. நாடு முழுவதும் இந்த சீரியல் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும் எனவும், சீரியர் இயக்குநரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் வால்மீகி அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து இந்த சீரியலை உடனடியாக தடை செய்ய முதல்வர் அம்ரிந்தர் சிங் உத்தரவு பிறப்பித்தார். மேலும் அமைதியை சீர்குலைக்கும் வகையிலும், மதரீதியான பிரிவினை அல்லது மோதல்களை தூண்டும் வகையில் நடந்து கொள்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
முதல்வரின் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் அந்தந்த மாவட்டங்களில் கேபிள் ஆபரேட்டர்கள் சீரியலை ஒளிபரப்ப தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிடத் தொடங்கினர் என்று அதிகாரப்பூர்வ வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாள் முழுவதும் நடைபெற்ற போராட்டத்தால் ஜலந்தர், அமிர்தசரஸ், ஹோஷியார்பூர், கபுர்தலா, பக்வாரா மற்றும் பெரோஸ்பூர் ஆகிய இடங்களில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டன. இருப்பினும், மருத்துவக் கடைகள், கிளினிக்குகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் இயக்க அனுமதிக்கப்பட்டன.