தைரியம் இருந்தால் மம்தா என்னை கைது செய்யட்டும் -அமித் ஷா!
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக-வின் பேரணியை மம்தா தடை செய்யலாம். ஆனால் பாஜக-வின் வெற்றியை அவரால் தடை செய்ய முடியாது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக-வின் பேரணியை மம்தா தடை செய்யலாம். ஆனால் பாஜக-வின் வெற்றியை அவரால் தடை செய்ய முடியாது என பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்!
மக்களவை தேர்தலுக்கான 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 7-வது கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடுமையான மோதல்கள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் காரசாரமாக ஒருவரையொருவர் தாக்கி பேசி வருகின்றனர். இந்நிலையில், இறுதிக்கட்ட பிரசாரத்துக்காக ஜாதவ்பூர் பகுதியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளும் மிக பிரமாண்டமான பொதுக்கூட்ட பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அமித் ஷா-வின் இந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி அளிக்க மறுத்துள்ளனர். மேலும் இந்த பேரணியில் பங்கேற்பதற்காக அமித் ஷா வரும் ஹெலிகாப்டர் தரையிறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் அம்மாநில பாஜக-வினர் மத்தியில் கடும் கொந்தளிப்பை இது ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அமித் ஷா பொதுக்கூட்டத்துக்கு தடை விதித்ததை கண்டித்து, போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும், தேர்தல் ஆணையத்தில் முறையிட இருப்பதாகவும் பாஜகவினர் அறிவித்துள்ளனர்.
மேற்கு வங்கா மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இது குறித்து கேனிங்கில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அமித்ஷா., "மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நான் "ஜெய் ஸ்ரீ ராம்" என கூறியதற்காக என்னை கைது செய்ய துடிக்கிறார். மேற்குவங்காளத்தில் நான் கலந்து கொள்ளும் பேரணியை மம்தா பானர்ஜி தடை செய்யலாம் , ஆனால் பாஜக வெற்றியை தடை செய்ய முடியாது.
சகோதரி மம்தா "ஜெய் ஸ்ரீ ராம்" பாடலை கேட்டு கோபமாக இருக்கிறார். நான் இன்று இங்கு "ஜெய் ஸ்ரீ ராம்" பற்றி பேசுகிறேன். தைரியம் இருந்தால், மம்தா என்னை கைது செய்யட்டும். நான் நாளை வரை கொல்கத்தாவில் தான் இருப்பேன் என தெரிவித்துள்ளார்.