பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் சட்டத்திற்கு அனுமதி!!
கற்பழிப்பு குற்றவாளிகளை 21 நாட்களில் தண்டிப்பதற்கான மசோதாவுக்கு ஆந்திர அரசு அனுமதித்துள்ளது!!
கற்பழிப்பு குற்றவாளிகளை 21 நாட்களில் தண்டிப்பதற்கான மசோதாவுக்கு ஆந்திர அரசு அனுமதித்துள்ளது!!
அமராவதி: ஹைதராபாத்தில் கடந்த மாதம் 27 ஆம் தேதி இரவு, தெலங்கானா மாநிலம் சைபராபாத் காவல் ஆணையர் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பெண் கால்நடை மருத்துவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 4 பேரையும், கடந்த 6 ஆம் தேதி விசாரணைக்காக சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற நிலையில், போலீசாரை தாக்கிவிட்டுதப்பியோட முயன்றதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.
இந்நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான கொடூரமான குற்றங்களைச் செய்தவர்களுக்கு 21 நாட்களுக்குள் தண்டனை வழங்குவதற்கான மசோதாவை சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய ஆந்திர மாநில அமைச்சரவை புதன்கிழமை முடிவு செய்தது. முன்னதாக, ஆந்திராவில் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளை 21 நாள்களில் தண்டிக்கும் வகையில், சட்டம் கொண்டு வரப்படும் என்று முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி உறுதியளித்துள்ளார். இதுகுறித்து ஆந்திர சட்டப்பேரவையில் பேசிய அவர், ஐதராபாத்தில் பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய 4 பேர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி, தெலங்கானா முதலமைச்சரையும், காவல்துறையையும் பாராட்டினார்.
அதேநேரத்தில், இந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை விமர்சித்த அவர், பாலியல் இணையதளங்கள் முடக்கப்பட்ட போதிலும், அத்தகைய படங்களை மக்கள் பார்ப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், ஆந்திர அரசின் புதிய மசோதாவில் இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதை தொடர்ந்து, முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி தலைமையிலான மாநில அமைச்சரவைக் கூட்டம், பெண்களின் பாதுகாப்பிற்கான வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தது, இது ஹைதராபாத் வழக்கில் பாதிக்கப்பட்ட திஷாவின் பெயரிடப்பட்டது. அவரது அடையாளத்தை பாதுகாப்பதற்காக பாதிக்கப்பட்ட பெண்ணை திஷா என்று போலீசார் பெயரிட்டனர்.
இந்த மசோதா பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கையாள்வதில் தற்போதுள்ள சட்டத்தை வலுப்படுத்துவதாகவும், குற்றவாளிகள் 21 நாட்களில் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் உள்துறை அமைச்சர் எம்.சுச்சரிதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.