விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவார் மோசடி செய்த மெஹுல் சோக்சி
ஆன்டிகுவாவில் வசித்து வரும் மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும். விரைவில் அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார் என அந்நாட்டு பிரதமர் காஸ்டன் பிரவுன் கூறியுள்ளார்.
புதுடெல்லி: நாட்டில் மோசடி செய்து வெளிநாடு தப்பியோடிய வைர தொழிலதிபர் மெஹுல் சோக்சி பற்றி முக்கிய செய்தி வந்துள்ளது. நமக்கு கிடைத்த தகவல்களின்படி, தற்போது ஆன்டிகுவா நாட்டில் தஞ்சம் அடைந்திருக்கும் மெஹுல் சோக்சியின், அந்நாட்டு குடியுரிமையை ரத்து செய்து விரைவில் இந்தியாவுக்கு அனுப்ப உள்ளார். இந்த அறிவிப்பு ஆன்டிகுவாவின் பிரதமரிடமிருந்து வந்துள்ளது. இதை அங்குள்ள உள்ளூர் செய்தித்தாள் ஒன்று உறுதி செய்துள்ளது. இந்தியாவில் இருந்து தப்பி ஓடிய பின்னர், தற்போது மெஹுல் சோக்சி ஆன்டிகுவாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளையில் வைர வியாபாரியான நிரவ் மோடியும், அவனது உறவினர் மெஹுல் சோக்சியும் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் பெற்ற கடனை அடைக்காமல் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பியோடினர். இதனையடுத்து நீரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெகுல் சோக்ஷி ஆகியோரின் மீது அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ தனித்தனியே மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கு விசாரணை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கிறது. வெளிநாடு தப்பிச்சென்ற நிரவ் மோடி லண்டனில் தஞ்சமடைந்திருப்பதும், மெஹுல் சோக்சி ஆன்டிகுவாவில் வசிப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைக்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தநிலையில், இந்தியாவின் முயற்ச்சிக்கு பலன் அளிக்கும் வகையில் ஆன்டிகுவாவின் பிரதமர் காஸ்டன் பிரவுன் (Gastone Browne) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில், "ஆன்டிகுவாவில் வசித்து வரும் மெஹுல் சோக்சியின் குடியுரிமை ரத்து செய்யப்படும். சட்ட நடவடிக்கைகளின் அடிப்படையில், அவர் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார். கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க விரும்பவில்லை எனக் கூறியதாக உள்ளூர் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.