டி.கே.சிவக்குமார் கைது - மத்திய அரசின் பழிவாங்கும் செயல்: ராகுல் கண்டனம்
டி.கே.சிவகுமாரைக் கைது செய்திருப்பது பழிவாங்கும் அரசியலின் மற்றொரு எடுத்துக்காட்டு, ஆகும் என காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி: 2017 ஆம் ஆண்டில் கர்நாடகத்தின் எரிசக்தி துறை அமைச்சராக டி.கே.சிவக்குமார் இருந்த போது, வரி ஏய்ப்பு, பண மோசடி உள்ளிட்ட புகாரில் டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அந்தச் சோதனையில் கணக்கில் வராத 8 கோடி ரூபாய்க்கு மேல் பணம் கைப்பற்றப்பட்டதாகவும், ஹவாலா பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாகவும் கூறி பொருளாதார குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் 2018 ஆம் ஆண்டில் வருமான வரித்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அன்று தொடங்கி நேற்று வரை சிவக்குமாரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறை வழக்குக்கு எதிராக டி.கே.சிவகுமார் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த மனு நேற்று தள்ளுபடி ஆனது. இதனையடுத்து நேற்றிரவு சிவக்குமாரை அமலாக்கத்துறை கைது செய்தது.
சிவக்குமார் கைது செய்யப்பட்டிருப்பது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி, கைது நடவடிக்கையை கண்டித்து கர்நாடக மாநிலம் தழுவிய காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், சிவக்குமார் கைது செய்யப்பட்டதுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னால் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டத்தை பதிவு செய்துள்ளார். அவர் தந்து ட்விட்டர் பக்கத்தில், டி.கே.சிவக்குமார் கைது செய்யப்பட்டது பழிவாங்கும் அரசியலுக்கு மேலும் ஒரு உதாரணம். அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் ந்திரமான ஊடகத்தைப் பயன்படுத்தி தனி நபரை இலக்காக்கும் போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கது எனப் பதிவிட்டுள்ளார்.