புது டெல்லி: டெல்லியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற சில மாதங்களே இருக்கும் நிலையில், மக்கள் பயன் பெரும் வகையில் பல அதிரடி அறிவிப்புக்களை அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து வருகிறார். அந்தவகையில், இன்று 200 யூனிட் வரை மின்சாரம் செலவழிக்கும் நுகர்வோர் எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று செய்தியாளர் சந்திப்பின் போது, ​​கெஜ்ரிவால், 2013 ஆம் ஆண்டில் 200 யூனிட்டுகள் மின்சாரத்திற்கு ரூ. 900 செலுத்த வேண்டியிருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் 477 ரூபாயாக குறைக்கப்பட்டது. இப்போது நுகர்வோர்கள் 200 யூனிட்டுக்கு எந்த பணமும் செலுத்த வேண்டியதில்லை. டெல்லியில் வசிப்பவர்கள் 200 யூனிட் அல்லது அதற்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என்றார். டெல்லியில் மின்சார நிறுவனங்களின் இழப்பு 17 சதவீதத்திலிருந்து 8 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் டெல்லி முதல்வர் கூறினார். 


மேலும், ஒருவர் 201 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தினால் முழு கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும் என்றும் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் எங்கள் அரசாங்கம் மின்சாரக் கட்டணத்தை மலிவாகிவிட்டது. நாங்கள் அரசாங்கத்திற்கு வந்தபோது, ​​மின் நிறுவனத்தின் நிலை மோசமாக இருந்தது. ஆனாலும் மின்சாரம் விலையை உயர்த்த நாங்கள் அனுமதிக்கவில்லை, கடந்த ஐந்து ஆண்டுகளில் எங்கள் அரசாங்கம் எடுத்த பல முயற்ச்சிக்கு பிறகு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது. 201 முதல் 400 யூனிட்டுகள் வரை 50 சதவீதம் மானியம் வழங்கப்படும் என்று கெஜ்ரிவால் தெரிவித்தார்.


ஏற்கனவே மெட்ரோ ரயில்கள் மற்றும் அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற அதிரடி அறிவிப்பை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.