பீகார் காப்பகத்தில் சிறுமிகள் சீரழிக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து டெல்லியில் நேற்றிரவு மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பீகார் மாநிலம், முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் சிறுமியர் காப்பகம் ஒன்றில் சுமார் 40 சிறுமியர்கள் உள்ளனர். இந்த காப்பகத்தின் நிர்வாகிகள் சிறுமிகளை கற்பழித்ததாகவும், ஒரு பெண்ணை அடித்துக் கொன்று காப்பக வளாகத்துக்குள் புதைத்து விட்டதாகவும் புகார்கள் எழுப்பப்பட்டது.


இதைதொடர்ந்து, இங்குள்ள சிறுமிகளை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைத்தபோது அவர்களில் பெரும்பாலானோர் ஏதோ ஒரு காலகட்டத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதுதொடர்பான விசாரணையை சிபிஐ ஏற்றுள்ள நிலையில் அடுத்தடுத்து பலர் கைதாகி வருகின்றனர்.


இந்நிலையில், இந்த சம்பவத்தை கண்டித்து ராஷ்டரிய ஜனதா தளம் கட்சி சார்பில் நேற்றிரவு டெல்லியில் மெழுகுவர்த்தி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மா.கம்யூ தலைவர் பிரகாஷ் கரத், இ கம்யூ தலைவர் டி.ராஜா, லோக்தந்த்ரிக் ஜனதா தளம் தலைவர் சரத் யாதவ்  உள்பட முக்கிய கட்சிகளை சேர்ந்த தலைவர்களும், பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.


அவர்களிடையே பேசிய ராகுல் காந்தி, பெண்களுக்கான பாதுகாப்பை வலியுறுத்தியும், உறுதிப்படுத்தவும் நாம் அனைவரும் இங்கு திரண்டிருக்கிறோம். உடனடியாக கடுமையான நடவடிக்கையும் எடுத்தாக வேண்டும் என குறிப்பிட்டார்.