விடிந்தால் வாக்குப்பதிவு... இப்போது கையும் களவுமாக சிக்கிய பாஜக பொதுச்செயலாளர் - ரூ.5 கோடி பறிமுதலா?
Maharashtra Assembly Election: வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக கூறி மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளரிடம் இருந்து ரூ.5 கோடியை சிக்கியதாக கூறப்படுகிறது. இதுசார்ந்த வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி உள்ளன.
Maharashtra Assembly Election Latest News Updates: மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 சட்டப்பேரவை தொகுதிகளிலும் நாளை (நவ. 20) வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிராவில் நான்டெட் மக்களவை தொகுதிக்கும் இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை (நவ. 23) அன்று நடைபெறுகிறது. இந்த தேர்தல் முடிவுகள் உடன் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல், வயநாடு, மக்களவை தேர்தல் இடைத்தேர்தல், வெவ்வேறு மாநிலங்களின் 47 சட்டப்பேரவை இடைத்தேர்தல் ஆகியவற்றின் முடிவுகளும் நவ. 23ஆம் தேதி வெளியாகும்.
நேற்றே தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்து பகுதிகளிலும் ஓய்ந்துவிட்ட நிலையில், மகாரஷ்டிரா தேர்தல் வாக்குப்பதிவுக்கு (Maharashtra Assembly Election 2024) தயாராகி வருகிறது. வாக்குப்பதிவு மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தபட்டிருக்கிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சிலமணி நேரமே இருக்கும் நிலையில், தற்போது மகாராஷ்டிரா பாஜகவின் பொதுச்செயலாளர் பணப்பட்டுவாடா குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ளார். அதுசார்ந்த வீடியோக்களும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றனர்.
பணத்துடன் சிக்கிய பாஜக மூத்த தலைவர்...?
பகுஜன் விகாஸ் அகாடி கட்சி (Bahujan Vikas Aghadi), நலசோபரா தொகுதியின் பாஜக வேட்பாளர் ராஜன் நாயக் (Rajan Naik) என்பவர், பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் வினோத் தாவ்டே (Vinod Tawde) மேற்பார்வையில் ஹோட்டல் ஒன்றில் வைத்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக குற்றச்சாட்டை முன்வைத்தது. பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறப்படும் அந்த ஹோட்டலுக்குள் பகுஜன் விகாஸ் அகாடி கட்சியை சேர்ந்த நலசோபரா தொகுதியின் தற்போதைய எம்எல்ஏ க்ஷிதிஜ் தாக்கூர் அவரின் ஆதரவாளர்களுடன் பரபரப்பாக நுழைய அந்த இடமே பரபரப்பாகியது. தொடர்ந்து, பகுஜன் விகாஸ் அகாடியின் ஆதரவாளர்கள் வினோத் தாவ்டேவுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள்.
மேலும் படிக்க | உச்சகட்டத்தை எட்டிய மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்.. இதுவரை நடந்த தேர்தல் நிலவரம்!
சிக்கிய ரூ.5 கோடி...?
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த ரூ.5 கோடி பணத்துடன் வினோத் தாவ்டேவை தாங்கள் கையும் களவுமாக பிடித்ததாக அவர்கள் தெரிவித்தனர். யாருக்கெல்லாம் பணத்தை பிரித்து தர வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய டைரியையும் அவரிடம் இருந்து கைப்பற்றியதாக தெரிவித்தனர். வினோத் தாவ்டே, வேட்பாளர் ராஜன் நாயக்கிடம் பணத்தை தர வந்தபோது பகுஜன் விகாஸ் அகாடி வேட்பாளரிடம் சிக்கியுள்ளார். தாவ்டேவின் முன்னிலையில் பகுஜன் விகாஸ் அகாடி கட்சியின் ஆதரவாளர்கள் பணக்கட்டுகளை தூக்கி காண்பிக்கும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியானது. தற்போது வினோத் தாவ்டே மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாஜக தலைவரை பணத்துடன் பிடித்ததாக கூறும் பகுஜன் விகாஸ் அகாடி காங்கிரஸ் அடங்கிய மகா விகாஸ் கூட்டணியில் இடம்பெறவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
சாடும் காங்கிரஸ்... மறுக்கும் பாஜக...
காங்கிரஸ் கட்சியும் இதில் பாஜகவுக்கு கண்டனம் தெரிவித்து, தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பண பலத்தை வைத்து தேர்தலில் வெற்றிபெற்றுவிடலாம் என பாஜக எண்ணுவதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. வினோத் தாவ்டேவை பகுஜன் விகாஸ் அகாடி தொண்டர்கள் ஹோட்டலில் முற்றுகையிடும் வீடியோவை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ள காங்கிரஸ்,"உயர்மட்ட தலைவர்கள் கூட இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தேர்தல் ஆணையம் இதனை கருத்தில் கொண்டு, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளது.
பாஜக இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்துள்ளது. மேலும், வினோத் தாவ்டே அந்த ஹோட்டலில் கட்சி தொண்டர்களுடன் வாக்குப்பதிவுக்கு தயார் ஆவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்த இருந்ததாக தெரிவித்தது. மேலும், அந்த ஹோட்டலின் சிசிடிவியை தேர்தல் ஆணையம் ஆய்வு செய்து இந்த பிரச்னையின் ஆணிவேரை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் பாஜக கோரிக்கை விடுத்துள்ளது. வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளதை அடுத்து எதிர்க்கட்சிகளின் வெற்று வித்தை எனவும் பாஜக சாடி உள்ளது.
எங்கிருந்து வந்தது இந்த பணம்...?
அதேநேரத்தில், காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சுப்ரியா சூலே,"பணமதிப்பிழப்பு செய்தது அவர்கள்தான், அப்படி என்றால் எப்படி, எங்கிருந்து இந்த பணம் வந்தது. இது உண்மை என்றால், வினோத் தாவ்டே போன்ற மூத்த தலைவர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும்" என்றார். மேலும், மகாராஷ்டிராவின் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி கிரன் குல்கர்னி இதுகுறித்து கூறுகையில், "இந்த விவகாரத்தில் எங்களுக்கு புகார் வந்திருக்கிறது. தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்றார்.
மேலும் படிக்க | எங்கள் ஆட்சிக்காலத்தில் தவறு செய்துவிட்டோம்... ராகுல் காந்தி சொல்வது என்ன?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ