மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பிரதமர் ஆக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜி தான் என அம்மாநில பாஜக தலைவர் தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெங்காலி ஒருவர் இந்திய நாட்டின் பிரதமராக முடியும் என்றால், அது மம்தா பானர்ஜிதான் என அம்மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


‘‘திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பிரதமராக நல்ல வாய்ப்புள்ளது. நாட்டின் முதல் பெங்காலி பிரதமர் என்ற பெருமையை பெறவும் அவருக்கு வாய்ப்புள்ளது.


அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்பதால்தான் சிறப்பாக பணியாற்றுகிறார். பெங்காலி ஒருவர் பிரதமாக முடியுமென்றால் அந்த பட்டியலில் மம்தா பானர்ஜிதான் முதலிடம்.
 
மம்தாவின் வெற்றியை பொருத்தே மேற்கு வங்கத்தின் தலைவிதி உள்ளது. ஜோதி பாசுவை முதல் பெங்காலி பிரதமராக எங்களால் ஆக்க முடியவில்லை. ஏனென்றால், அவரின் கட்சி அவரை பிரதமராக விடவில்லை. முதல் பெங்காலி குடியரசு தலைவர் என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெற்று விட்டார். அதனால் இது பெங்காலி பிரதமரை தேர்வு செய்வதற்கான நேரம் தற்போது கைகூடியுள்ளது’’ என தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்கத்தில் மம்தாவின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக கடுமையாக போராடி வருகிறது. இந்நிலையில் மம்தாவை பிரதமராக ஆக்குவது தொடர்பாக பாஜக தலைவர் பேசியிருப்பது அக்கட்சியில் புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.