பா.ஜ.க. முயற்சியால் தான் ஜார்கண்ட், நக்சல் இல்லாத மாநிலமாக மாறி இருப்பதுடன், அமைதியான சூழலும் இங்கு நிலவுகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 30-ல் நடைபெறுகிறது. மொத்தம் 5 கட்டங்களாக இம்மாநிலத்தில் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ரகுபர் தாஸ் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்  கொள்ள வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. இந்நிலையில், தற்போது தேர்தல் பிரசாரம் முழுவீசில் நடைபெற்று வருகிறது. வாக்குகளை எண்ணிக்கை டிசம்பர் 23 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. 


இந்நிலையில், பாஜக ஆட்சியில் ஜார்க்கண்ட் மாநில இயற்கை வளங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என அம்மாநிலத்தில் இன்று  நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். ‘ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஐந்து ஆண்டுகள் பாஜக தலைமையில் நல்லாட்சி நடைபெற்றது. ஊழலை ஒழிப்பதற்காக இரவும்  பகலும் ஜார்க்கண்ட் அரசு பாடுபட்டது. பயங்கரவாத கும்பல்களான நக்சல்களை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. 


இன்று நாடு முழுவதும் தாமரை மலர்கிறது என்றால் அது இங்குள்ள மக்கள் மற்றும் கட்சி தொண்டர்களின் ஆசிகளால் தான். இப்பகுதி மக்கள் எப்போது தாமரையின் பக்கமே நிற்கிறார்கள். பா.ஜ., தலைமையிலான ஆட்சி அமைந்தது ஜார்கண்டிற்கு மிக முக்கியமானது. அதனால் தான் வலிமையான, நிலையான அரசு இங்கு அமைக்க முடிந்தது. ராம்ஜென்ம பூமி விவகாரம் சர்ச்சை காங்.,ஆல் ஏற்படுத்தப்பட்டது. அவர்கள் நினைத்திருந்தால் ஆரம்பத்திலேயே இந்த பிரச்னைக்கு தீர்வு கண்டிருக்கலாம். காலம் கடத்தினர். அவர்கள் ஓட்டு வங்கியை பற்றி மட்டுமே அக்கறை கொண்டனர். அந்த எண்ணம் தான் நாட்டை சீரழித்து விட்டது என தொண்டர்கள் மத்தியில் அவர் உரையாற்றினார். 


கடந்த வாரம் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் வீர மரணம் அடைந்த 4 போலீசாருக்கு மரியாதை செலுத்துகிறேன். பயங்கரவாத  அச்சுறுத்தலுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். நீர் நிலம் மற்றும் காடுகள் ஆகியவை பாதுகாக்கும் முயற்சியில் பாஜக அரசு  தொடர்ந்து ஈடுபடும்’ என பிரதமர் மோடி பேசினார்.