பொதுமக்கள் வங்கிக் கணக்குகளில் ரூபாய் 15 லட்சம் போடுவோம் என பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவதாக 2014-ஆம் ஆண்டு பொதுதேர்தலின் போது பாஜக வாக்குறுதி அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.


2019-ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் எனவும், மோடியே மீண்டும் பிரதமராக பதவியேற்பார் எனவும் தெரிவித்துள்ளார். 


ஆரோக்கியமான ஜனநாயகத்தில் சாதி, மதம் மற்றும் சமயத்தை வைத்து அரசியல் செய்வதை ஏற்க முடியாது. இந்து, முஸ்லிம்களை அடிப்படையாக வைத்து அரசியல் செய்வது துரதிர்ஷ்டவசமானது என குறிப்பிட்ட அவர்,  2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது, பொதுமக்களின் வங்கிக் கணக்குகளில் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று ஒருபோதும் வாக்குறுதி அளிக்கவில்லை என தெரிவித்தார்,


மேலும் கருப்புப் பணத்துக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றுதான் பாஜக கூறியது, அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவும் தெரிவித்தார்.


முன்னதாக ‘பாஜகவின் தேர்தல் அறிக்கை தனிமைப்படுத்தப்பட்ட மனிதரின் குரலாக இருக்கிறது’ என ராகுல் காந்தி விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து ராஜ்நாத் சிங்கிடம் கேட்டபோது, ராகுல் கூறுவது அடிப்படை ஆதாரமற்றது என்றும், அவர் கூறுவதை சீரியசாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் தெரிவித்தார்.