பாஜக-வின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காந்தியை மீண்டும் சுடுவதற்குச் சமமாக இருப்பதாகவும் வைகோ சாடியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியில் ஆட்சி செய்து வரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ‘அடுத்தடுத்து எடுத்து வரும் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகள் வருங்காலத்தில் ஆபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும்' என்று வைகோ எச்சரித்துள்ளார்.


குடியுரிமை திருத்தச் சட்டத்தையும் கடுமையாக சாடிய மதிமுக பொதுச்செயலாளர், பாஜக-வின் அடுத்தடுத்த நடவடிக்கைகள் காந்தியை மீண்டும் சுடுவதற்குச் சமமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


செய்தியாளர்கள் மத்தியில் பேசிய வைகோ, “காஷ்மீர் மக்களுக்கு 370-வது சட்டப் பிரிவின் கீழ் சிறப்பு அந்தஸ்து கொடுத்தோம். நமது அரசியல் சட்ட சாசனத்தில் சிறப்பு அந்தஸ்து கொடுப்பதாக அவர்களுக்கு வாக்குறுதி கொடுத்தோம். ஆனால், அதை இந்த மத்திய அரசு மீறியுள்ளது. காஷ்மீர் இன்று எரிந்து கொண்டிருக்கிறது. 


தற்போது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம்களையும் ஈழத் தமிழர்களையும் ஒதுக்கும் வகையில் இந்தச் சட்டம் பாரபட்சமாக இருக்கிறது. மகாத்மா காந்தியை மீண்டும் சுட்டுக் கொன்றதற்குச் சமம், மத்திய அரசின் நடவடிக்கை.


நாட்டின் பொருளாதாரம் மீட்க முடியாத இடத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். ஆனால், அரசோ அதை திசைத் திருப்பத் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது சரியல்ல,” என்று தெரிவித்துள்ளார்.