முன்னாள் அமைச்சரின் மகன் காங்கிரஸில் இணைந்தார்: பாஜகவுக்கு பெரும் பின்னடைவா?
பாஜகவின் முன்னால் மத்திய அமைச்சரின் மகன் மன்வேந்திரா சிங் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகனும், பார்மர் தொகுதி பாஜக எம்எல்ஏவுமான மன்வேந்திரா சிங் இன்று பாஜகவின் கட்சியில் இருந்து விலகினார். தற்போது அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார் மன்வேந்திரா சிங். அப்பொழுது அவர் தோளில் காங்கிரஸ் கட்சியின் துண்டை போட்டு ராகுல்காந்தி வரவேற்றார். அப்பொழுது அவருடன் அஷோக் கெலாட், சச்சின் பைலட், அவினாஷ் பாண்டே, பன்வார் ஜிதேந்திர சிங் மற்றும் ஹரிஷ் சவுதாரி மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் இருந்தனர்.
பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் மன்வேந்திரா சிங் இணைந்தது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஏனென்றால் வரும் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் இவர் மூலம் வரும் தேர்தலில் ராஜ்புத் சமூகத்தினரின் வாக்குகளை அதிகமாக ஈர்க்கலாம் எனவும் காங்கிரஸ் நம்புகிறது.
ஆனால் மன்வேந்திரா சிங்கின் முடிவால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று ராஜஸ்தான் மாநில பாஜக கூறியுள்ளது.
54 வயதான மன்வேந்திரா சிங், கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் பார்மர் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.