’ப்ளூ வேல்’ விளையாட்டை தடை செய்ய மத்திய அரசு உத்தரவு
கடந்த சில நாட்களாக பல உயிர்களை பறித்துள்ள மிகவும் ஆபத்தான 'ப்ளூ வேல் சேலஞ்ச்' என்ற 'ஆன்லைன்' விளையாட்டு பல்வேறு இணையத்தளத்தில் பரவி வரும் நிலையில் இந்த விளையாட்டை நிறுத்தும்படி 'கூகுள், பேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்ராகிராம், மைக்ரோசாப்ட், யாகூ' போன்ற இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
ரஷ்யாவைச் சேர்ந்த, 22 வயது இளைஞர் உருவாக்கிய இந்த 'ஆன்லைன்' விளையாட்டு ப்ளூ வேல் சேலஞ்ச். இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களுக்கு 50 நாட்களுக்கு பல்வேறு சவால்கள் தரப்படும். கடைசி சவால் தற்கொலை செய்து கொள்வது. ரஷ்யா, ஜப்பானில் அதிகமானோர் விளையாடி வரும் இந்த விளையாட்டு, நம் நாட்டிலும் வேகமாக பரவி வருகிறது.
மஹாராஷ்டிரா, மத்திய பிரதேசத்தில், இந்த விளையாட்டில் பங்கேற்ற, மூன்று பள்ளி சிறுவர்கள், தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து, ஆபத்தான இந்த விளையாட்டு தொடர்பான இணைப்புகளை தடுத்து நிறுத்தும்படி, இணையதள மற்றும் சமூகவலைதள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.