பட்ஜெட் 2017: மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது - அமித் ஷா
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள மத்திய பட்ஜெட் பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட் என பா.ஜ.,தேசிய தலைவர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அமித்ஷா கூறியதாவது:- 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி அவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார். அரசியலில் வெளிப்படை தன்மை ஏற்பட்டுள்ளது. இது பெண்கள் மற்றும் ஏழைகளுக்கான பட்ஜெட். சமூக பாதுகாப்பு, சுகாதாரம், ஏழை மக்கள் அனைவருக்கும் வீடு வழங்குவதிலேயே பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் கவனம் உள்ளது பாராட்டுதலுக்குரியது. வேலைவாய்ப்பை உருவாக்குவது, தொழிலாளர்கள் வளர்ச்சி மற்றும் உற்பத்தி துறையில் முன்னேற்றம் ஆகியவற்றிலேயே அரசின் கவனம் உள்ளது. மகாத்மா காந்தி தேசிய
ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ரூ.37,000 கோடியில் இருந்து 48,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இது கிராமங்களின் வளர்ச்சிக்கு உதவும். விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக பெருக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அமித்ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.