2 பேரின் உயிரை விட 21 பசுக்களின் உயிர்தான் முக்கியம்: பாஜக எம்எல்ஏ சர்ச்சை
மீண்டும் மீண்டும் சர்ச்சையை ஏற்ப்படுத்தும் உத்தர பிரதேச மாநில பாஜக நிர்வாகிகள்
இந்த மாதம் ஆரம்பத்தில் உத்தரபிரதேச மாநிலம் புலாண்ட்ஷர் அருகே புலந்தர் சஹர் என்ற நகரில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதாக வந்த தகவலையடுத்து அப்பகுதியை முற்றுகையிட்ட பசு காவலர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதைத் தடுக்க முயன்ற போலீஸ்காரர் சுபோத் சிங் வன்முறையாளர்களின் கல்வீச்சால் படுகாயம் அடைந்த நிலையில் அவரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து சுட்டதால் உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சுமித் குமார் என்பவர் குண்டடி பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமான நபர் பஜ்ரங் தள் தலைவர் யோகேஷ் ராஜ் தலைமறைவாக இருந்து வருகிறார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என இறந்த போலிசாரின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறினார் உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்.
டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற்ற புலந்த்சேர் சம்பத்தை அரசு சரியாக கையாளவில்லை என்றும், அந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று உடனடியாக தனது பதவியை உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் ராஜினாமா செய்ய வேண்டும் என 80-க்கு அதிகமான முன்னால் அரசு அதிகாரிகள் கடந்த புதன்கிழமை அன்று மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடிதம் எழுதினர்.
இந்த கடிதத்தை அடுத்து நேற்று பாஜக எம்.எல்.ஏ சஞ்சய் சர்மா ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. அவர் கூறியதாவது, புலாந்த்சேர் சம்பவத்தை வைத்து உ.பி. முதல்வரை ராஜினாமா செய்ய சொல்லும் அனைவரும் ஒன்றை தெரிந்துக்கொள்ளுங்கள், அந்த சம்பவத்தில் இறந்த இரண்டு பேரை பற்றி மட்டும் அனைவரும் கவலைப்படுகிறார்கள். ஆனால் அங்கு 21 பசுக்கள் கொல்லப்பட்டதைக் குறித்து யாரும் கவலைப்படவில்லை. பசுக்களை கொன்றவர்களே குற்றவாளிகள். அவர்களை தான் கைது செய்யவேண்டும். இதை புரிந்துக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.