குற்றப் பின்னணி கொண்ட எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியலில் குற்றப் பின்னணி உடையவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும், இதனைத் தடுக்கும் வகையில் அவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கக் கோரியும் தொண்டு நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் 2 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறுவோர் 6 ஆண்டுகளுக்கு போட்டியிட முடியாது என்று தற்போது சட்டம் இருந்தாலும்,  அரசியலில் குற்றப் பின்னணி  உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்த சட்டத்தை மேலும் வலுப்படுத்த வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.


கிரிமினல் வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட உடனோ அல்லது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்ட உடனோ அந்த நபர்களை தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் பட்சத்தில் குற்றப் பின்னணி உடையவர்கள் அரசியலில் நுழைவதைத் தடுக்க முடியும் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. பல்வேறு கட்டங்களாக இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்.பி.க்கள் மற்றும்  எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க அனைத்து  மாநிலங்களிலும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டது. 


இரண்டு வாரங்களுக்கு முன் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்த அறிக்கையை மத்திய அரசு தாக்கல் செய்தது.  இந்நிலையில்,  தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது.