காவிரி விவகாரம்: கர்நாடகாவில் போராட்டம்
தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் பல இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளது. பஸ்கள் இயக்கப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு கர்நாடகத்தில் விவசாயி களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
50 டி.எம்.சி தண்ணீர் சம்பா சாகுபடிக்கு திறந்து விட வேண்டும் என தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. கர்நாடகவில் போதிய மழை இல்லாத காரணத்தினால், தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என அந்மாநில அரசு கூறியது. ஆனால் இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அடுத்த 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடிவீதம் தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடகாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கூடாது என்று வலியுறுத்தி கன்னட அமைப்பினர் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள். மாண்டியா மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது. மேலும் பெங்களூர்-மைசூர் சாலையில் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தபபட்டன. தமிழ் நாட்டில் சில பஸ்கள் மட்டும் தமிழக எல்லை வரை செல்கிறது. தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே முற்றிலும் போக்கு வரத்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக மற்றும் கர்நாடக மாநில எல்லைகளில் பதட்டம் நிலவி வருகிறது.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், அம்மாநில சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திராவும் மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சட்டத்தை மக்கள் கைகளில் எடுக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.