கர்நாடக மாநிலத்தில் காவிரி உற்பத்தியாகும் குடகு மலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் காவிரியின் குறுக்கே உள்ள அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. 120 அடியை அதிகபட்ச நீர் தேக்கும் அளவாக கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணையில் 88.35 அடியாக நீர்மட்டம் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 9066 கன அடி வீதம் தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு   7025 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதே போன்று 84 அடியை உச்சபட்ச நீர் தேக்கும் அளவாக கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 73.23 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6335 கன அடி வீதம்  தண்ணீர் வரும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு  7000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரியில் வினாடிக்கு 14,025 கன அடி வீதம் தண்ணீர் பாய்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ஆகஸ்ட் மாதம் கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.


ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய நவீன்குமார், கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு நீர் வரத்து குறைவாக இருந்தாலும், தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் நீர் இருப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக தெரிய வரும் என வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது குறிபபிடத்தக்கது.