நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் இன்று துவங்கியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புக்கு திங்கள்கிழமை தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வில் 16,38,428 பேர் கலந்து கொள்கின்றனர். 12ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வும் திங்கள்கிழமை தொடங்குகிறது. இத்தேர்வில் 11,86,306 பேர் பங்கேற்கின்றனர். சி.சி.இ நடைமுறையை அமல்படுத்தும் முடிவை மத்திய அரசு கைவிட்டது. இதைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்புத் தேர்வு மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.


சி.பி.எஸ்.இ 10-ஆம் வகுப்புத் தேர்வுக்காக நாடு முழுவதும் 4,453 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியே வெளிநாடுகளில் 78 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்புத் தேர்வுக்காக நாடு முழுவதும் 4,138 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 


இந்தியாவுக்கு வெளியே 71 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் சிபிஎஸ்இ தேர்வுகள் சுதந்திரமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாநில அரசு அதிகாரிகள், காவல்துறையினருடன் சேர்ந்து சிபிஎஸ்இ எடுத்துள்ளது.


சலுகைகள்: சிபிஎஸ்இ தேர்வு எழுதும் மாணவர்களில் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டிருப்போருக்கு, தேர்வுக் கூடங்களுக்கு நொறுக்குத் தீனிகளை கொண்டு வர அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், சிறப்பு உதவிகள் தேவைப்படும் மாணவர்களுக்கு, லேப் டாப் சாதனத்தை தேர்வு கூடத்துக்கு எடுத்து வருவதற்கு இந்த ஆண்டு முதல் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 


எனினும், தேர்வு எழுதும் முன்பு லேப் டாப் கருவிகள் அதிகாரிகளால் சோதிக்கப்பட்ட பிறகே, அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படும். அதேநேரத்தில், லேப் டாப்பில் இணையதள பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளுக்கு மாற்றுத் திறனாளிகள் முறையே 4,510 பேரும், 2,846 பேரும் தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர் என்று சி.பி.எஸ்.இ அமைப்பின் மூத்த அதிகாரி குறிப்பிட்டார்.