கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் பிரபல மூத்த பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு கட்சிகளும், அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் பத்திரிக்கையாளர்கள் போராட்டங்களை நடத்தினர்.


இதனையடுத்து, கவுரி லங்கேஷ் வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டார். இந்த குழுவில் மொத்தம் 19 அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் விசாரணை மேற்கொண்டதில் சிசிடிவி கேமரா பதிவுகளைக் கைப்பற்றியுள்ளனர். 


அப்போது கவுரி லங்கேஷின் வீட்டின் முன்புறம் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில், கொலை சம்பவம் பதிவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 13 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ஹெல்மெட் போட்ட படி ரெயின்கோட் அணிந்த கொலையாளி கவுரி லங்கேஷை துப்பாக்கியால் சுடுகிறார். கழுத்து, மார்பு, வயிறு ஆகிய பகுதிகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், வீட்டு வாசலில் சுருண்டு விழுகிறார் கவுரி லங்கேஷ். பின்னர் கொலையாளிகள் மோட்டார் சைக்கிளில் தப்பி செல்கிறார். 


சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியை பார்க்கும் போது, கவுரி லங்கேஷ் திட்டமிட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வருகிறது. மேலும் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது. விரைவில் கொலையாளி யார் என்று தெரியும் என சிறப்பு புலனாய்வு அதிகாரி ஒருவர் கூறினார்.