12 மாநிலங்களில் அறிமுகமானது ‘One Nation One Ration’ திட்டம்!
கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மத்திய அரசு ‘ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ திட்டத்தை செயப்படுத்தியுள்ளது!
கர்நாடகா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 12 மாநிலங்களில் மத்திய அரசு ‘ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ திட்டத்தை செயப்படுத்தியுள்ளது!
ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, ஹரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், கோவா, ஜார்க்கண்ட், மற்றும் திரிபுரா ஆகிய 12 மாநிலங்களில் ’ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ திட்டத்தை மத்திய அரசு புதன்கிழமை (ஜனவரி 1, 2020) முதல் செயல்படுத்தியுள்ளது.
இந்த 12 மாநிலங்களின் பொது விநியோக முறையின் பயனாளிகள் இந்த மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் வசிக்கும் போது தங்களது தற்போதைய குடும்ப அட்டையில் இருந்து தங்களது பங்கைப் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜூன் 2020-க்குள், நாட்டின் அனைத்து மாநிலங்களும் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்த விதியின் கீழ், புதிய குடும் அட்டையின் நிலையான வடிவம் 2020 ஜூன் 1 முதல் தொடங்கப்படும் எனவும், புதிய வடிவமைப்பைப் பின்பற்றுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த புதிய வடிவமைப்பானது யூனியன் பிரதேசங்களில் வழங்கப்படும் குடும்ப அட்டைகளுக்கும் பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பழைய அட்டையின் அடிப்படையில், பொது விநியோக முறையின் பயனாளிகள் புதிய ரேஷன் அட்டையினை பெற முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆஃப் சேல் (electronic Point of Sale (ePoS)) சாதனங்களில் பயோமெட்ரிக் / ஆதார் அங்கீகாரத்திற்குப் பிறகு இந்த வசதி கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் மக்களவையில் டிசம்பர் 3, 2019 அன்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறன் வசதி முழு ஆன்லைன் ePoS சாதனங்கள் மூலம் மட்டுமே கிடைக்கும் என்றும் பாஸ்வான் சபைக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
---'ஒரு தேசம் ஒரு குடும்ப அட்டை’ திட்டம்---
புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் தினசரி கூலிகளுக்கு நன்மைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இத்திட்டம், தகுதிவாய்ந்த பயனாளிகள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் எந்தவொரு நியாயமான விலைக் கடையிலிருந்தும்(FPS), ஒரே குடும்ப அட்டை பயன்படுத்தி மானிய விலையில் தங்களது உரிமையுள்ள உணவு தானியங்களைப் பெறலாம்.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக நாட்டில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும். அதன்பிறகு அனைத்து ரேஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் (Electronic Point of Sale) அல்லது ஆதார் அடையாளம் (Aadhaar Authentication) அட்டை மூலம் கண்டறிந்து பயனாளிகளுக்கு பொருட்கள் வழங்கப்படும்.
"இந்த முறை பெரும்பாலும் புலம்பெயர்ந்த பயனாளிகளான தொழிலாளர்கள், தினசரி கூலிகள், வேலை தேடி வேறு இடத்திற்கு செல்லுவோர்க்ளுக்கு பயனளிக்கும். நாடு முழுவதும் உள்ள இடங்களில் தங்களின் இருப்பிடத்தை அடிக்கடி மாற்றிக் கொள்கிறவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.