குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) பல மாநிலங்கள் தெரிவித்த எதிர்ப்பின் மத்தியில், CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கும் செயல்முறையை ஆன்லைனில் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை திருத்த சட்டத்தினை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்த மாட்டோம் என்று கேரளா, மேற்குவங்கம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெளிப்படையாக தெரிவித்துள்ள நிலையில் மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையினை கையில் எடுத்துள்ளது.


குடியுரிமைக்கான விண்ணப்பங்களை மாவட்ட நீதவான் மூலம் திசைதிருப்பவும், முழு செயல்முறையையும் ஆன்லைனில் செய்யவும் உள்துறை அமைச்சகம் ஆலோசித்து வருவதாக வட்டாரங்கள் தெரிவித்தன. 


முன்னதாக, சர்ச்சைக்குரிய சட்டத்தை அகற்றக் கோரி கேரள சட்டமன்றம் செவ்வாயன்று ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த செயல்முறையை முழுமையாக ஆன்லைனில் உருவாக்குவதன் மூலம், மாநில அரசின் தலையீட்டை அனைத்து மட்டத்திலும் முடிவுக்குக் கொண்டுவருவதில் மத்திய அரசு வெற்றிபெறும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


எவ்வாறாயினும், அரசியலமைப்பின் 7-வது அட்டவணையின் யூனியன் பட்டியலின் கீழ் சட்டம் இயற்றப்பட்டுள்ளதால், மாநில அரசுகள் CAA-னை செயல்படுத்த மறுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


2014 டிசம்பர் 31-ஆம் தேதி வரை மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டு பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவிற்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. காங்கிரஸ், இடது சாரிகள் உள்ளிட்ட எதிர்கட்சிகள் இந்த சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பி வருகின்றனர், எனினும் தங்களது நடவடிக்கைகளில் இருந்து பின்வாங்கும் முடிவு இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. மேலும் காங்கிரஸ் தலைமையிலான பொய் போராட்டக்காரர்கள் மக்கள் மத்தியில் தவறான புரிதலை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் குற்றம்சாட்டி வருகிறது. 


கேரளாவைத் தவிர, மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் முதலமைச்சர்களும், இந்த சட்டமானது "அரசியலமைப்பிற்கு விரோதமானது" என கூறி இதற்கு தங்கள் மாநிலத்தில் அனுமதி இல்லை என தெரிவித்து வருகின்றனர்.. 


மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "உங்கள் (பாஜக) அறிக்கையில், வளர்ச்சி பிரச்சினைகளுக்கு பதிலாக, நாட்டை பிளவுபடுத்துவதாக வாக்குறுதியை அளித்துள்ளீர்கள். குடியுரிமை ஏன் மதத்தின் அடிப்படையில் இருக்கும்? இதை நான் ஏற்க மாட்டேன், மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நீங்கள் பெரும்பான்மை கொண்டிருப்பதால் பலவந்தமாக சட்டங்களை இயற்றலாம். ஆனால் நாட்டை பிளவுபடுத்த நாங்கள் உங்களை அனுமதிக்க மாட்டோம்." என தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், குடியுரிமை தொடர்பாக எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்ற எந்த மாநில சட்டமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். மேலும் குடியுரிமை தொடர்பாக எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றும் அதிகாரம் பாராளுமன்றத்திற்கு மட்டுமே உள்ளது, கேரளா உட்பட எந்த சட்டமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.