மேற்குவங்கத்தில் நிலவி வரும் அரசியல் வன்முறை மற்றும் மருத்துவர்கள் போராட்டம் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு மேற்கு வங்காளம் அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 11-ஆம் தேதி மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், மருத்துவமனையில் பணியாற்றி வரும் 2 பயிற்சி மருத்துவர்களை கொடூரமாக தாக்கினர்.


இதனையடுத்து உறவினர்களின் இந்த தாக்குதலை கண்டித்து கடந்த 12-ஆம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் மம்தா பானர்ஜி, அவர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் மம்தாவின் இந்த நடவடிக்கை போராட்டக்காரர்களுக்கு ஆத்திரத்தை கொடுத்துள்ளது.


இதையடுத்து, அங்குள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் 300-க்கும் மேற்பட்ட மூத்த மருத்துவர்கள் தங்கள் பணியை ராஜினாமா செய்தனர்.


மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டு, தங்களது 6 கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என டாக்டர்கள் அறிவித்து உள்ளனர்.


இதற்கிடையில் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவருகிறது. இதன் எதிரொலியாக பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். 


இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் தொடர்ந்துவரும் அரசியல் வன்முறை மற்றும் மருத்துவர்கள் போராட்டம் குறித்து தனித்தனியே விளக்கம் அளிக்குமாறு அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இன்று கடிதம் அனுப்பியுள்ளது.