முத்தலாக் நடைமுறையை செல்லாது அது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் அறிவிக்குமானால், இஸ்லாமியரின் திருமணம் மற்றும் விவகாரத்தை முறைப்படுத்த சட்டம் கொண்டு வரப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமியர் பின்பற்றும் முத்தலாக்க பிரச்னை குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு மதங்களை சேர்ந்த 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரித்து வருகிறது. இந்த பிரச்னை குறித்து ஏற்கனவே மூன்று நாட்கள் விசாரணை நடந்துள்ளது. இன்று 4-வது நாளாக விசாரணை நடந்தது.


மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, '' இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் தான், 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச்சுக்கு பரிந்துரை செய்தது. முத்தலாக் பிரச்னையை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் பரிந்துரை செய்தது. 


தற்போது முத்தலாக் மட்டும் விசாரிக்கப்படுகிறது. மற்ற இரண்டு பிரச்னைகளையும் இதே பெஞ்ச் விசாரிக்குமா அல்லது வேறு பெஞ்ச் விசாரிக்குமா,'' என கேள்வி எழுப்பினார். அதற்கு நீதிபதிகள், ' இதே பெஞ்ச் எதிர்காலத்தில் விசாரிக்கும்' என்றனர்.


பின்னர் நீதிபதிகள், முத்தலாக்கை ரத்து செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்தால், மத்திய அரசு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கும் என கேள்வி எழுப்பினர். 


அதற்கு முகுல் ரோஹத்கி,'' முத்தலாக்கை ரத்து செய்து, அது சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட் அறிவித்தால், இஸ்லாமியரின் திருமணம் மற்றும் விவாகரத்தை முறைப்படுத்த மத்திய அரசு தனிச் சட்டம் கொண்டு வரும்,'' என்றார்.