டெல்லியில் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு முதல்வர் கெஜ்ரிவாலின் முக்கிய அறிவிப்பு
டெல்லியில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு தனியாக மின்சார மீட்டர் (Prepaid Meter) வைத்துக்கொள்ளும் திட்டத்தை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தொடங்கி வைத்தார்.
புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal) இன்று (புதன்கிழமை) "முதல்வர் வாடகை மின்சார மீட்டர் யோஜனா" (Mukhyamantri Kirayedaar Bijli Meter Yojna) திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், டெல்லியில் வசிக்கும் வாடகைகாரர்களும் ப்ரீபெய்ட் மீட்டர்களைப் பெற முடியும். இன்று செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் கெஜ்ரிவால், வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தங்களுக்கு தனியாக மின்சார மீட்டர் (Prepaid Meter) வைத்துக்கொள்ள வீட்டு உரிமையாளர்களிடம் தடையின்மை சான்றிதழ் (No Objection Certificate- NOC) அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இரண்டு ஆவணங்கள் மட்டும் இருந்தால் போதும் எனக் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் சில பகுதிகளைத் தவிர, 24 மணிநேரமும் தடையில்லா மின்சாரம் பெறும் நாட்டின் ஒரே நகரம் டெல்லி தான் என்று பெருமையாக கூறினார். நாடு முழுவதிலும் பார்த்தால் மலிவான மின்சாரம் டெல்லியில் தான் வழங்கப்படுகிறது. டெல்லியில் வசிக்கும் வாடகைகாரர்களுக்கு தற்போது வரை தனியாக மின்சார மீட்டர் வைத்துக்கொள்ளும் வசதி கிடைக்கவில்லை. அப்படியே மீட்டர் வைக்க விரும்பினால், நில உரிமையாளரிடமிருந்து என்ஓசி பெறப்பட வேண்டிய சூழல் இருந்தது.
ஆனால் இப்போது "முதல்வர் வாடகை மின்சார மீட்டர் திட்டத்தின் கீழ் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் தனி மீட்டரை நிறுவ விரும்பினால், நில உரிமையாளரிடமிருந்து என்ஓசி வாங்க வேண்டிய அவசியமில்லை. தனி மீட்டரை நிறுவுவதற்கு வாடகைகாரர்கள் கீழே கொடுக்கப்பட்டு உள்ள 3 எண்களை தொடர்ப்புக்கொண்டு விவரங்கள் அளித்தால், மின்சார குழு வந்து மீட்டரை பொருத்திவிட்டு செல்வார்கள் எனத் தெரிவித்தார்.
மின்சாரம் நிறுவனம் மற்றும் தொடர்புக்கொள்ள வேண்டிய எண்கள்"
19122: பிஎஸ்இஎஸ் யமுனா (BSES Yamuna)
19123: பி.எஸ்.இ.எஸ் ராஜ்தானி (BSES Rajdhani)
19124: டாடா பவர் (Tata Power)