ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு!
ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நிமிட வாசிப்பில் இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு உங்களுக்காக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் பதேபூரில் 18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் கொளுத்திய மற்றொரு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பக்கத்தில் வீட்டில் குடியிருந்த உறவினர் ஒருவர் இந்தக் கொடுமையைச்செய்ததாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் அந்தப் பெண் கான்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தக் கொடுமைக்கு ஆளாக்கியவரை பிடிக்க காவல்துறை தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்கிறார். தும்காவில் இன்று மதியம் 2 மணிக்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பாஜக வேட்பாளர்களை ஆதரித்து உரையாற்றுகிறார். மேற்கு வங்கத்தில் உள்ள அண்டால் விமானநிலையத்துக்கு சென்று அங்கிருந்து தும்காவுக்கு ஹெலிகாப்டரில் மோடி செல்கிறார். இதற்கிடையே அண்டால் விமானநிலையத்தில் மேற்கு வங்க நிலைமை குறித்து அம்மாநில பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்துகிறார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜக-வுக்கும் பரபரப்பான போஸ்டர் யுத்தம் நடக்கிறது. டெல்லியில் உள்ள சட்டவிரோத காலனிகளை முறைப்படுத்த தங்களது அரசுகள் நடவடிக்கை எடுத்ததாக பாஜகவும் ஆம் ஆத்மி கட்சியும் மார் தட்டிக் கொள்கின்றன. முறைப்படுத்தும் நடவடிக்கையை எடுத்ததாக பாஜக பெருமை பேசுவது ஒருபுறமிருக்க, அந்தக் காலனிகளுக்கு போதிய வசதிகளை தர மத்திய அரசு முட்டுக்கட்டையாக இருக்கிறது என ஆம் ஆத்மி கூறுகிறது. அங்கீகாரம் இல்லாமல் உள்ள ஆயிரத்து 731 காலனிகளில் வசிக்கும் சுமார் 40 லட்சம் வாக்காளர்களின் ஓட்டுவங்கியை குறிவைத்து தில்லி அரசியல் சூடு பிடித்துள்ளது.
தேசிய பார்மாசூட்டிகல் விலை நிர்ணய ஆணையமான என்பிபிஏ, 21 உயிர்காப்பு மருந்துகளின் விலையை 50 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளதால் நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் அத்தியாவசிய மருந்துகள் என இந்திய அரசு பட்டியலிட்டுள்ளது. புதிய விலையை விட அதிகமாக நிர்ணயிக்கக் கூடாது என மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மருந்து தயாரிப்புச்செலவு அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டும், இழப்பைத் தவிர்ப்பதற்காக இந்த மருந்துகளை தயாரிப்பு நிறுவனங்கள் உற்பத்தி செய்வதைத் தவிர்த்ததால் நோயாளிகள் கடும் சிரமத்துக்கு ஆளானதாலும் இந்த விலையேற்றம் செய்ததாக ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
இமயமலையில் அமைந்துள்ள ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதால் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளிலும் கடுங்குளிர் வாட்டியெடுக்கிறது. கடந்த இரண்டு நாள்களாக பரவலாக காலை வேளையில் பனி சூழ்ந்துள்ளது. பஞ்சாப், ஹரியாணா, மத்தியப்பிரதேசத்தை தொடர்ந்து பிகார், கிழக்கு உத்தரப்பிரதேம் மற்றும் தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜம்முகாஷ்மீர், லடாக், இமாச்சலப்பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டிலும் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலை மேம்படுத்தும் பணிக்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்துள்ளது. நெடுஞ்சாலை விரிவாக்கத்துக்காக 72 ஆண்டுகள் பழமையான குருத்வாராவை அகற்றுவதற்கு காஷ்மீர் வாழ் சீக்கியர்கள் பெருந்தன்மையுடன் ஒப்புதல் தந்துள்ளனர். கடந்த 1947ஆம் ஆண்டில் ஸ்ரீநகர்-பாரமுல்லா சாலையில் இந்த குருத்வாரா தாமாதம் சாகிப் நிறுவப்பட்டது. தற்போது அதற்கு ஒதுக்கப்பட்ட மாற்று இடத்தில் குருத்வாரா அமைக்கப்படவுள்ளது. இதுதொடர்பாக சீக்கிய சமூகத்தாருடன் மாவட்ட ஆட்சியர் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த சமரசம் காணப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தின் வாராணசியில் பிரபல பாலிவுட் நடிகை ஜானவி கபூர் தனது சகோதரி குஷியுடன் சேர்ந்து தசாஅஸ்வமேத படித்துறையில் வழிபாடு நடத்தினார்... மந்திர உச்சாடனங்கள் முழங்க சிறப்பு கங்கை ஆரத்தி நிகழ்ச்சியில் இருவரும் பங்கேற்றனர். அனைத்து சம்பிரதாயங்களுடன் ஜானவியும் குஷியும் கங்கை அன்னையை வழிபட்டனர்.
உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீண் குமார் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் வெளியாகியுள்ளது. தனது வீட்டின் அருகே வசிப்பவர் மதுபோதையில் சச்சரவு செய்ததாகக் கூறி அவரையும் அவரது 7 வயது மகனையும் பிரவீண்குமார் சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்துறையிடம் புகார் கொடுத்தும் பிரவீண்குமார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் முதல்வர் யோகி ஆதித்யாவிடம் முறையிடப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணத்தை முறையாகச் செலுத்துவதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள FASTag முறை இன்று முதல் நாடுமுழுவதும் அமலாகிறது. தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களுக்கும் இந்த FASTag முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. FASTag ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடிகளை கடந்து செல்ல முடியும். தானியங்கி ஸ்கேனர் மூலம் FASTag கார்டில் உள்ள கட்டணம் கழிக்கப்பட்டபின் தடுப்பு விலகும். 23 வங்கிகள் மூலம் FASTag கார்டு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகதீஷ்குமார் நேற்று தாக்கப்பட்டார். பல்கலைக்கழக வளாகத்தில் அவரது காரை வழிமறித்த ஒரு மாணவர் கும்பல் கார் கண்ணாடியை உடைத்ததோடு துணைவேந்தரை காரின் வெளியே இழுத்து தாக்கியது. ஆவேசத்துடன் காணப்பட்ட மாணவர்களிடமிருந்து அவரை மீட்பதற்குள் சிரமமாகி விட்டது. இதைத் தொடர்ந்து துணைவேந்தரின் அறைக்கு சென்ற அந்த அராஜககும்பல் அங்கிருந்த பொருட்களை அடித்து நாசமாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. உயர்த்தப்பட்ட விடுதிக் கட்டணத்தை ரத்துசெய்யக் கோரி கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
டெல்லி -NCR பகுதிகளில் பால் விலையை அமுல் மற்றும் மதர் டெய்ரி நிறுவனங்கள் திடீரென உயர்த்தியுள்ளன. மதர் டெய்ரி பால் பாக்கெட்டுகள் லிட்டருக்கு 2 முதல் 3 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. டோண்டு மில்க் லிட்டர் 40 ரூபாயிலிருந்து 42 ஆகவும், ஃபுல்கிரீம் மில்க் 53 ரூபாயிலிருந்து 56 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. அமுல் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் அதிகரித்துள்ளது. அமுல் கோல்டு ஒரு லிட்டர் 56 ரூபாய்க்கும், அமுல் ஃப்ரஷ் ஒரு லிட்டர் 44 ரூபாய்க்கும் இப்போது விற்கப்படுகிறது.
மத்தியப்பிரதேசத்தில் கடும் உரத்தட்டுப்பாடு நிலவுவதால் விவசாயிகள் கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் பேடுல் மாவட்டத்தின் சிச்சோலி பகுதி அருகே கூட்டுறவு சொசைட்டிக்கு உரம் ஏற்றி வந்த லாரியை ஆயிரக்கணக்கான விவசாயிகள் சூழ்ந்து கொண்டு சிறைப்பிடித்தனர். இதையடுத்து அங்கு வந்த காவல்துறை அதிகாரிகளும் அவர்களை சமாதானம் செய்து உர லாரியை அனுப்பி வைத்தனர். சொசைட்டிகளிடம் இருந்து தேவையான உரத்தை பெற முடியவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர். தட்டுப்பாட்டை பயன்படுத்தி உரத்தை மிக அதிக விலைக்கு வியாபாரிகள் விற்பதாகவும் அவர்கள் கூறினர். நடவடிக்கை எடுக்காத மாநில விவசாயத்துறை அமைச்சர் சுக்தேவை கண்டித்து கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.