பொதுமக்களின் கேள்விகளுக்கு பிரதமர் மோடி மழுப்பலாக பதில் அளித்தது முறையா என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி, காணொலி காட்சி மூலம அண்மையில் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது நிர்மல் குமார் ஜெயின் என்ற நபர், "நடுத்தர வர்க்கத்தினரிடமிருந்து பலவழிகளில் வரிகளை வசூலிப்பதில் மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. ஆனால், அவர்களின் வருமான வரி விகிதங்களை குறைக்கவோ, அவர்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கவோ எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?" என கேள்வியெழுப்பினார்.


இந்த கேள்விக்கு பிரதமர் மோடி அவர்கள் "நீங்கள் ஒரு வணிகர், அதனால் இப்படிதான் பேசுவீர்கள். ஆனால், மத்திய அரசு பொதுமக்களுக்காக பல நல்ல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்பது தான் உண்மை" என பதில் அளித்தார்.


தொடர்ந்து நிர்மல் குமார் அடுத்த கேள்வியை கேட்க முயன்றபோது, பிரதமர், "வணக்கம் புதுச்சேரி!" என்றபடி, அவரது கேள்வியை தவிர்த்ததாக கூறப்படுகிறது.


இந்த நிகழ்வை  சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது... 



"வணக்கம் புதுச்சேரி! 
என்பதுதான், நடுத்தர வர்க்கத்தினர் குறித்த கேள்விக்கு பிரதமரின் பதில்.
பத்திரிகையாளர்களை சந்திப்பதை மறந்தே போய்விட்ட மோடி, கட்சி நிர்வாகிகளுடனான சந்திப்பில்கூட எல்லா கேள்விகளும் பாஜக சாதகமாகவே கேட்கப்பட வேண்டும் என எதிர்பார்க்கிறார். இதேப்போன்று கேள்விக்கு உரிய பதிலையும் அவர் அளிக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.