பெங்களூரு வடக்கு தொகுதியை காங்.,க்கு திருப்பி கொடுத்தார் தேவ கவுடா!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட பலமான வேட்பாளர் கிடைக்காததால், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திருப்பி கொடுத்தார் முன்னாள் பிரதமர் தேவ கவுடா!
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் போட்டியிட பலமான வேட்பாளர் கிடைக்காததால், அந்த தொகுதியை காங்கிரஸ் கட்சிக்கு திருப்பி கொடுத்தார் முன்னாள் பிரதமர் தேவ கவுடா!
28 மக்களவை தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியும், தேவ கவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளமும் (மஜத) கூட்டணி அமைத்துள்ளன. எனினும், மஜத கேட்ட தொகுதிகளை ஒதுக்க காங்கிரஸ் மறுத்தது.
நீண்ட இழுபறிக்குப் பின்னர் மஜத-வுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பெங்களூரு வடக்கு தொகுதியில் களமிறங்க தேவ கவுடா திட்டமிட்டிருந்தார், ஆனால் களம் தனக்கு சாதகமாக இல்லாத காரணத்தால் துமக்கூருவில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
நீண்ட போராட்டத்துக்கு பின்னர் உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேடிக் கண்டுபிடித்தார். அதேவேலையில் பெங்களூரு வடக்கு தொகுதிக்கு சரியான வேட்பாளர் கிடைக்காததால் காங்கிரஸிடம் இந்த தொகுதியினை திருப்பி அளிக்க தேவ கவுடா முடிவு செய்துள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தேவ கவுடா, இந்த தொகுதியை காங்கிரஸுக்கு திருப்பி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் இத்தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் கிருஷ்ண பையர் கௌடா களமிறக்கப்படுவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் பெங்களூரு வடக்கு தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் சதானந்த கவுடா மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்த குழப்பம் காரணமாக, காங்கிரஸ்-மஜத கூட்டணி சார்பில் அந்தத் தொகுதியில் இன்னும் தேர்தல் பணிகளும் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.