மக்களவையில் காங்கிரஸ் தலைவராக அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு
மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மேற்கு வங்கத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
புது டில்லி: ராகுல் காந்தி மறுப்பு தெரிவித்ததை அடுத்து, மக்களவை காங்கிரஸ் குழுவின் தலைவராக மேற்கு வங்கத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நாடு முழுவதும் 542 தொகுதிகளுக்கு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் பாஜக மட்டும் 303 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சியை பிடித்தது. இரண்டாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றுக் கொண்டார்.
பாஜகவுக்கு எதிராக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 52 இடங்களில் மட்டும் தனித்து வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களிலும் வென்றன. மற்ற கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால் மக்களவையில் 10 சதவீத இடங்களை காங்கிரஸ் வெல்லாததால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. அதாவது குறைந்தது 55 இடங்களில் காங்கிரஸ் கட்சி தனித்து வென்றிருக்க வேண்டும்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டார். காங்கிரஸ் கட்சியின் கோட்டை எனக் கூறப்படும் அமேதி தொகுதியிலும், முதல் முறையாக தென்னிந்தியாவின் கேராள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால் மக்களவை தேர்தலில் அமேதியில் 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தியை, பாஜக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். வயநாடு தொகுதியில் அபார வெற்றி பெற்றார்.
நேற்று 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
இந்தநிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏ.கே.அந்தோணி, ஜெயராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக யாரை? அமர்த்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியாக மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த அதிர் ரஞ்சன் சவுத்ரி தேர்வு செய்யப்பட்டார்.
கடந்த மக்களவை காங்கிரஸ் குழு தலைவராக மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.