பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி உரிமை கோராது என்றும், மோடியை அகற்றுவதே இலக்கு எனவும் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் கட்சியின் தலைமை பதவியை ராகுலிடம் ஒப்படைத்த பிறகு தீவிர அரசியல் ஈடுபாடுகளில் இருந்து சோனியா சற்று விலகியே இருந்தார். ஆனால் பா.ஜனதா கட்சியை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க வேண்டுமானால் 2004-ம் ஆண்டு தடாலடியாக சில எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டியது போல இப்போதும் ஒன்று திரட்ட வேண்டிய நிர்ப்பந்தம் சோனியாவுக்கு ஏற்பட்டுள்ளது.


இதை கருத்தில் கொண்டே மாநில கட்சிகளின் தலைவர்களை வரும் 23-ஆம் தேதி டெல்லிக்கு வருமாறு சோனியா அழைத்துள்ளார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் அன்றைய தினம் இரவு தனது வீட்டில் முக்கிய மாநில கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் விருந்து கொடுக்க உள்ளார். அவர் விருந்து கொடுக்கும் சமயத்தில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து விடும்.


இந்த தேர்தல் முடிவை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்க சோனியா வியூகம் வகுத்துள்ளார். காங்கிரசாரின் ஒரே குறிக்கோள், காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் பதவி கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, பா.ஜனதா ஆட்சி அமைந்து விடக்கூடாது என்பது தான். இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய அவர் தயாராகியுள்ளார்.


தேர்தல் முடிவுகளில் இழுபறி ஏற்பட்டால், எதிர்க்கட்சித் தலைவர்களில் யாரை வேண்டுமானாலும் பிரதமராக ஏற்க தயார் என்று சோனியா முன்வந்துள்ளார்.


தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஒரு நிமிடத்தை கூட வீணாக்கக் கூடாது என்பதற்காக சோனியா இத்தகைய முயற்சிகளை நேரடியாக மேற்கொண்டுள்ளார். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டும் அவரது அதிரடி வியூகத்துக்கு முதல் கட்ட வெற்றி கிடைத்து இருப்பதாக கூறப்படுகிறது.


சோனியாவின் இந்த அதிரடி வியூகம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத் உறுதிபடுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்., பிரதமர் பதவி யாருக்கு என்பதை பிரச்சினை ஆக்க மாட்டோம். எங்கள் (காங்கிரஸ்) தலைமை இந்த வி‌ஷயத்தில் மிக, மிக தெளிவாக உள்ளது. மாநில கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் ஒருமித்த கருத்துடன் யாரை பிரதமராக தேர்வு செய்தாலும் அதை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளும். பிரதமர் பதவிக்காக காங்கிரஸ் விடாப்பிடியாக உரிமை கோராது என தெரிவித்துள்ளார்.