கொரோனாவால் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 72 வயது முதியவர் உயிரிழப்பு..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சீனாவில் இருந்து பரவத்தொடங்கிய உயிர்கொல்லி தொற்றுநோயான 'கொரோனா வைரஸ்' தற்போதைய சூல்நிலையில் உலகையே உலுக்கி வருகிறது. உலகில் மொத்தம் 176 நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரையில் 9,149 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரசால் இந்தியாவிலும் 174 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதித்தவர்களில் கர்நாடகா, டில்லி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (மார்ச்-19) பஞ்சாபை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். 


சுமார் 72 வயதான இவர், ஜெர்மனியில் இருந்து இத்தாலி வழியாக பஞ்சாப் வந்திருந்தார். இதையடுத்து, கொரோனா உறுதிப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. 


கொரோனா தொற்று ஒரு நபருக்கு உறுதிப்படுத்தப்படும் போது, அவருக்கு எப்படி பரவியது எனக் கண்டறிய முடியவில்லை எனில், சமுதாய நோய்த் தொற்று என வரையறுக்கப்படும். கொரோனா தொற்று இருக்கிறது எனத் தெரியாமலேயே, அதாவது அறிகுறிகள் வெளியே தெரியாமலே உள்ள நபர்கள், தங்களை அறியாமல் பிறருக்கு நோய்த்தொற்றை பரப்பிக் கொண்டிருப்பதே சமுதாய நோய்த்தொற்றுக்கு காரணமாகும். 


இப்படிப்பட்ட நிலையில், கொரோனா பரவலை முறியடிப்பது மிகவும் கடினமானதாக மாறிவிடும். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அது சமுதாயத் தொற்றாக மாறிவிடலாம் என அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில், இதைக் கண்டறிவதற்காக இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆங்காங்கே மாதிரிகளை எடுத்து பரிசோதித்து வருகிறது.