மீண்டும் லாக்டௌன், பதுங்கிப் பாயும் கொரோனா: 24 மணி நேரத்தில் 62,291 பேர் புதிதாக பாதிப்பு
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,291 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,908,373 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை: நாட்டில் பல்வேறு இடங்களில் கோவிட் -19 தொற்று அதிகரித்து வருகிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர பல மாநிலங்கள் பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 62,291 பேர் புதிதாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனுடன் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 11,908,373 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 450,000 ஐ கடந்துள்ளது.
தொற்றால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இப்போது 6 வது இடத்தில் உள்ளது. கொரோனா தொற்றால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 161,275 ஆக உயர்ந்தது.
கடந்த ஆண்டு மே மாதத்திலிருந்து காணப்படாத விகிதத்தில் நாட்டில் கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று அதிகரித்து வருகின்றது. தடுப்பூசி போடும் செயல்முறை தற்போது நடந்துகொண்டிருந்தாலும், இந்தியாவில் இருக்கும் இரண்டாவது கொரோனா அலை, முதல் அலையை விட மோசமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் அஞ்சுகிறார்கள்.
இதற்கிடையில், டெல்லியில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 1,534 பேர் புதிதாக பாதிக்கப்பட்டார்கள். மகாராஷ்டிராவில் 26,902 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. மும்பையில் மட்டும் 5,513 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,090 பேர் பாதிக்கப்பட்டனர்.
ALSO READ: மீண்டும் தீயாய் பரவுகிறதா கொரோனா; ஒரே நாளில் 59,118 பேருக்கு தொற்று
மொத்த தொற்றின் எண்ணிக்கையைக் கொண்டு பார்த்தால், இந்தியாவில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்கள் மகாராஷ்டிரா (2,600,833), கேரளா (1,111,897), கர்நாடகா (978,478), ஆந்திரா (895,879), மற்றும் தமிழ்நாடு (873,219) ஆகும்.
மகாராஷ்டிரா (Maharashtra) அரசு ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க முடிவு செய்தது. இது தொடர்பான அறிவிப்பை முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டது.
மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் கட்டுக்கடங்காமல் போவதால், மார்ச் 28 முதல் மாநிலத்தில் இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
முன்னதாக, முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தின் கொரோனா வைரஸ் நிலைமையை மறுஆய்வு செய்ய வீடியோ கான்பரன்சிங் மூலம் ஒரு முக்கியமான கூட்டத்தை கூட்டினார். அனைத்து மாவட்ட ஆணையர்கள், கலெக்டர்கள், எஸ்.பி.க்கள் மற்றும் மாவட்ட மருத்துவமனைகளின் மூத்த மருத்துவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
மாநிலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இதை கட்டுப்படுத்துவதற்கான உத்திகளை வகுப்பதே கூட்டத்தின் நோக்கமாக இருந்தது. அதிக அளவில் பரவும் கொரோனா தொற்றைத் தொடர்ந்து நெரிசலைக் குறைக்க ஞாயிற்றுக்கிழமை முதல் மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை மால்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கோவிட் -19 தொற்று வழக்குகள் பெருமளவில் அதிகரித்ததை அடுத்து, மார்ச் 26 முதல் ஏப்ரல் 4 வரை பீட் மாவட்டத்தில் லாக்டௌன் (Lockdown) அறிவிக்கப்பட்டது. கொடிய கொரோனா வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதற்காக பீட் மாவட்ட ஆட்சியரால் லாக்டௌன் விதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. லாக்டௌனின் போது, மாவட்டத்தில் அனைத்து திருமண அரங்குகள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் மூடப்பட்டிருக்கும்.
ALSO READ: கொரோனா: சானிடைசரில் புற்றுநோயின் ஆபத்து உண்டா? அதிர்ச்சி தகவல்!