நியூ டெல்லி: வங்க கடலில் உருவான ஃபானி புயல் சூறாவளியாக மாறி நேற்று (வெள்ளிக்கிழமை) காலை ஒடிசா கடற்கரையை கடக்க துவங்கியது. காற்றின் வேகம் மணிக்கு 200 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் ஒடிசாவை தாக்கியது. இதில் பல மாவட்டங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மரங்கள் சாய்ந்துள்ளன. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன. புயலால் ஏற்பட்ட விபத்துகளில் 3 பேர் பலியாகினர். பல பகுதிகளுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் நேற்று நள்ளிரவு மேற்கு வங்க மாநிலத்தை அடைந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று (சனிக்கிழமை) காலை மணிக்கு 90 கிமீ வேகத்தில் வட-கிழக்கு நோக்கி ஃபானி புயல் நகர்ந்தது. எங்கெல்லாம் ஃபானி புயல் நகருகிறதோ, அங்கெல்லாம் பலத்த சேதத்தை ஏற்படுத்தி வருகிறது.


ஒடிசாவில் ஃபானி புயல் காரணமாக, இதுவரை 10 பேர் இறந்துள்ளனர். ராஜ்நகரில் 2 பேர், பூரியில் 2 பேர், மயூர்பஞ்ச் 2 பேர், ஜாஜ்பூர் 2 பேர், நயாகாட் மற்றும் ஜலேஷ்வர் பகுதியில் தலா ஒருவர் என மொத்தம் 10 பேர் பலியாகியுள்ளனர். பலத்த கன மழையுடன் மணிக்கு 175 கி.மீ., வேகத்தில் ஃபானி புயல் ஒடிசாவில் வீசியது. சில மாவட்டங்களில் ரெட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டு உள்ளது. மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனக் கூறப்பட்டு உள்ளது.


புயல் பாதிப்புக்கள் குறித்து முன்கூட்டியே கணிக்கப்பட்டதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒரிசா அரசு மேற்கொண்டது. சுமார் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். புவனேஷ்வர் மற்றும் கொல்கத்தாவில் விமான நிலையங்கள் மூடப்பட்டன.