சிறையில் இருந்தே தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால் - என்னென்ன தெரியுமா?
Arvind Kejriwal News: அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மக்களவை தேர்தலை முன்னிட்டு ஆறு வாக்குறுதிகளை வழங்கி உள்ளார். அதனை இங்கு காணலாம்.
Arvind Kejriwal Six Poll Promises News: மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்.1ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து, பரப்புரை பணியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக அதன் தேர்தல் வாக்குறுதிகளை தயார் செய்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதியை வரும் ஏப். 6ஆம் தேதி வெளியிடும் என அறிவித்துள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கி உள்ள இந்தியா கூட்டணியும் தேசிய அளவில் போட்டியிடுகின்றன. அதில், இந்தியா கூட்டணி சார்பாக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சமாஜ்வாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை முக்கிய கட்சிகள் இத்தேர்தலை சந்திக்கின்றன.
அரவிந்த் கெஜ்ரிவாலின் கடிதம்
அந்த வகையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கிய கட்சியான ஆம் ஆத்மி கட்சி இன்று தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. சிறையில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று எழுதிய கடிதத்தின் வாயிலாக 6 முக்கிய தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் எழுதிய அந்த கடிதத்தில், "அன்பான இந்தியர்களே, இந்த உங்கள் மகனின் வாழ்த்துக்களை நீங்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுங்கள், நான் வாக்குகளை இங்கு கேட்கவில்லை, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக யாரையும் தோற்கடிக்க வேண்டும் என்று கூறவில்லை. இந்தியாவை புதிய இந்தியாவாக மாற்றுவது பற்றி பேசுகிறேன்.
நம் நாட்டில் எல்லாம் இருக்கிறது. நான் சிறையில் இருக்கிறேன், இங்கு சிந்திக்க எனக்கு நிறைய நேரம் கிடைக்கிறது. இந்தியத் தாயைப் பற்றி நான் நினைக்கிறேன், இந்தியத் தாய் வேதனையில் இருக்கிறார், மக்களுக்கு நல்ல கல்வி கிடைக்காதபோது, சரியான சிகிச்சையின்றி, மின்வெட்டு ஏற்படுகிறது, சாலைகள் உடைந்து கிடக்கின்றன. இவை குறித்து நான் சிந்திக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். இதனை இன்று நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவால் வாசித்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலின் 6 வாக்குறுதிகள் கீழ்காணுமாறு:
- நாடு முழுவதும் 24 மணி நேரம் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
- நாடு முழுவதும் ஏழைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
- ஒவ்வொரு கிராமத்திலும், சுற்றுப்புறங்களிலும் சிறந்த அரசுப் பள்ளிகளை உருவாக்கப்படும்.
- ஒவ்வொரு கிராமம் மற்றும் சுற்றுப்புறங்களில் மொஹல்லா கிளினிக்குகள் நிறுவப்படும்.
- சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையில் கூறப்பட்டுள்ளபடி விவசாயிகளுக்கு பயிர்களுக்கு நியாயமான விலையை உறுதி செய்யப்படும்.
- டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கப்படும்.
'ஜனநாயகத்தை காப்போம்'
முன்னதாக, டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் நிலையில், இதனை எதிர்த்து இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் இன்று டெல்லி ராம் லீலா மைதானத்தில் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.
Loktantra Bachao அதாவது ஜனநாயகத்தை காப்போம் என இந்த போராட்டத்திற்கு பெயரிடப்பட்டிருந்தது. இதில் முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஃபரூக் அப்துல்லா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் சரத் பவார், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், சீதாராம் யெச்சூரி, டி ராஜா, மேகபூபா முஃப்தி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் சம்பாய் சோரன் மற்றும் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும் படிக்க | பணமதிப்பிழப்பின் நோக்கம் என்ன ஆனது... உச்ச நீதிமன்ற நீதிபதி அதிரடி கருத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ