புது டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பான வழக்குகளை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.முரளிதர் புதன்கிழமை (பிப்ரவரி 26, 2020) பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் விவாதத்துக்கு உள்ளாகி உள்ளது. மேலும் பார் கவுன்சில் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளது. இருப்பினும், இது ஒரு வழக்கமான இடமாற்றம் தான். ஏனெனில் வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பே, பிப்ரவரி 12 அன்று உச்சநீதிமன்றம் இதை பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதுதொடர்பான அறிவிப்பை நேற்று (புதன்கிழமை) வெளியிடப்பட்டது. தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டேவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதரை பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.


மேலும் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் தனது பொறுப்பை ஏற்குமாறு நீதிபதி முரளிதருக்கு ஜனாதிபதி உத்தரவிட்டதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 12 ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், நீதிபதி முரளிதரை டெல்லி உயர்நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு உயர் நீதிமன்றம் பரிந்துரைத்தது.



இருப்பினும், தில்லி உயர்நீதிமன்ற பார் அசோசியேஷன் (டி.எச்.சி.பி.ஏ) நீதிபதியின் இடமாற்றத்தை கண்டித்து, இது தொடர்பாக ஒருமனதாக ஒரு தீர்மானத்தையும் நிறைவேற்றியது. உச்சநீதிமன்றத்தின் கொலீஜியத்தால் மிகச்சிறந்த நீதிபதிகளில் ஒருவரை மாற்றுவதில் பார் அசோசியேஷன் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியது. 


அவரது இடமாற்றத்தைக் கண்டித்த பார் அசோசியேஷன், "இத்தகைய இடமாற்றங்கள் நீதித்துறை மீது அவநம்பிக்கை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நீதி வழங்கும் வழக்கறிஞர்களின் நம்பிக்கையை கேள்விக்குறியாக்கும் நடவடிக்கையாக அமைந்துள்ளது எனக் கூறியுள்ளது. மேலும் இந்த உத்தரவை மறுபரிசீலனை செய்யுமாறு பார் அசோசியேஷன் கோரிக்கை வைத்துள்ளது.


வன்முறை ஏற்படும் வகையில் பேசியதாக பாஜக தலைவர்கள் கபில் மிஸ்ரா, அனுராக் தாக்கூர் மற்றும் பிரவேஷ் வர்மா ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என நீதிபதி முரளிதர் மற்றும் நீதிபதி தல்வந்த் சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் உத்தரவு பிறப்பித்தது.