புதுடெல்லி: பெற்றோர் சம்பாதித்து கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. பெற்றோரின் கருணையால் மட்டுமே அவர்களுடன் மகன் வசிக்கலாம் என்று டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் ஓய்வு பெற்ற பெற்றோர்களுடன் வசிக்கும் இரு மகன்கள் மற்றும் மருமகள்களால் தங்கள் வாழ்க்கை நரகமாகி விட்டதாகவும் அவர்களை தங்கள் வீட்டில் இருந்து வெளியேற்றக் கோரியும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் பெற்றோருக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதற்கு எதிராக மகன்கள் டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.


இவ்வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி பிரதிபா ராணி நேற்று உறுதி செய்தார். அவர் அளித்த தீர்ப்பில், பெற்றோர் தங்கள் சம்பாத்தியத்தில் கட்டிய வீட்டில் மகனுக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்று அவர் தீர்ப்பு அளித்தார்.


மேலும், மகன் திருமணம் ஆனவராகவோ அல்லது ஆகாதவராகவோ இருந்தாலும் இரு தரப்புக்கும் இந்த தீர்ப்பு பொருந்தும். எனவே சுய சம்பாத்தியத்தில் பெற்றோர் கட்டிய வீட்டில் வசிக்க மகன், மகள்களுக்கு உரிமை இல்லை. பெற்றோர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்களின் ஆயுட்காலம் வரை இருந்து கொள்ளலாம். ஆனால் சட்டப்படி அந்த வீட்டை பிள்ளைகள் உரிமை கொண்டாட முடியாது என நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.