டெல்லி - லாகூர் பஸ் சேவை ரத்து செய்யப்பட்டதாக டெல்லி போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
டெல்லி மற்றும் லாகூர் இடையே சதா-இ-சர்ஹாத் பஸ் சேவை நிறுத்தப்பட்டது என டெல்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) அறிவித்துள்ளது.
புதுடெல்லி: டெல்லி மற்றும் லாகூர் இடையிலான சதா-இ-சர்ஹாத் பேருந்து சேவையை டெல்லி போக்குவரத்துக் கழகம் (டிடிசி) இன்று (திங்கள்கிழமை) நிறுத்தியது. பாகிஸ்தான் தனது பஸ் சேவையை நிறுத்திய பின்னர் டி.டி.சி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 370 வது பிரிவு இந்தியா நீக்கியதை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் பஸ் சேவையை நிறுத்தியுள்ளது.
பஸ் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு லாகூருக்கு புறப்பட இருந்தது. இருப்பினும், திங்கள்கிழமை (இன்று) முதல் பஸ் சேவையை நிறுத்த வேண்டும் என பாகிஸ்தான் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம் (பி.டி.டி.சி) கடந்த சனிக்கிழமை டெல்லி போக்குவரத்துக் கழகத்துக்கு (டி.டி.சி.) அறிவித்தது. பாகிஸ்தானின் இந்த முடிவுக்குப் பிறகு, டிடிசி ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில் "ஆகஸ்ட் 12, 2019 முதல் டெல்லியில் இருந்து லாகூர் வரை பஸ் சேவையை டிடிசியால் இயக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது." சதா-இ-சர்ஹாத் சேவையை ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்லியில் இருந்து லாகூருக்கு டிடிசி மூலம் பஸ் இயக்கப்படுகிறது, அதே நேரத்தில் லாகூரிலிருந்து டெல்லிக்கு பி.டி.டி.சி பஸ் சேவை ஒவ்வொரு செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளிலும் இயக்கப்படுகிறது எனக் கூறப்பட்டு உள்ளது.