வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் போராட்டம் நடத்தியவர்களுக்கு இடையே, வடகிழக்கு டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை மோதல் வெடித்தது. இருதரப்பினரும் மோதிக் கொண்டதில் 38 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 500-க்கும் அதிகமானோர் குருதேக் பகதூர், லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயண், ஜே.பி.சி. ஆகிய 3 மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக, பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.


போலீஸ் தரப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும், உயர் அதிகாரிகள் உள்பட 70 பேர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.144 தடை உத்தரவு அமலில் உள்ள வடகிழக்கு டெல்லியில் தற்போது 45 கம்பெனி துணை ராணுவப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், உளவுத்துறை அதிகாரி அன்கிட் சர்மாவின் உடலில் 400-க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திக்குத்து காயங்கள் இருந்ததாக, பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். 


உடல் முழுவதும் காயங்கள் இருந்தைப் பார்த்து டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை இப்படிப்பட்ட ஒரு கொடூரமான கொலையை தங்கள் வாழ்நாளில் பார்த்ததில்லை எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இதன்மூலம் அன்கிட் சர்மாவை வன்முறைக் கும்பல் நீண்ட நேரம் சித்ரவதை செய்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. 


டெல்லி சந்த்பாக் பகுதியைச் சேர்ந்த அன்கிட் சர்மா, 2017 ஆம் ஆண்டில் இருந்து உளவுத்துறையில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். வன்முறை நடந்த செவ்வாய்க்கிழமை மாலை அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அன்கிட் சர்மா, நிலைமையை அறிந்துகொள்வதற்காக மீண்டும் வெளியில் சென்றுள்ளார். அப்போது அவரை வன்முறையாளர்கள் சுற்றி வளைத்து கடுமையாக தாக்கியும், கத்தியால் குத்தியும் கொன்று உடலை கால்வாயில் போட்டுள்ளனர். மறுநாள் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.