நிலக்கரி ஊழல் வழக்கில் நிலக்கரித்துறை முன்னாள் செயலர் குப்தாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது மேற்கு வங்காளம் மாநிலத்தின் மோய்ரா மற்றும் மதுஜோரே ஆகிய பகுதிகளில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்ததில் சரியான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.


இதுதொடர்பாக விசாரணை நடத்திய CBI, நிலக்கரித்துறை முன்னாள் செயலர் எச்.சி. குப்தா உள்ளிட்டோர் மீது டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 2012-ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.



இந்த வழக்கு தொடர்பாக CBI விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில்  சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் ரூ.117 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.


இந்த வழக்கில் குற்றம்நடந்திருப்பதை உறுதிப்படுத்திய CBI சிறப்பு நீதிபதி பாரத் பராஷார், முன்னாள் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, விகாஸ் மெட்டல்ஸ் அன்ட் பவர் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் விகாஸ் பாட்னி, அதே நிறுவனத்தை சேர்ந்த ஆனந்த் மாலிக், ஓய்வு பெற்ற நிலக்கரித்துறை அதிகாரி கே.சி.சம்ரியா மற்றும் நிலக்கரித்துறை முன்னாள் இணை செயலாளர் கே.எஸ்.குரோப்பா ஆகியோரை குற்றவாளிகளாக அறிவித்தார்.


இந்நிலையில் இந்த வழக்கில் நிலக்கரித்துறை செயலர் எச்.சி.குப்தா, அதிகாரிகள்  குரோப்பா, கே.சி. சம்ரியா ஆகியோருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், விகாஸ் பாட்னி, ஆனந்த் மாலிக் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனையும் வழங்கி நீதிபதி பாரத் பராஷார் தீர்ப்பளித்துள்ளார். 


மேலும் விகாஸ் மெட்டல்ஸ் மற்றும் பவர் லிமிடெட் நிறுவனத்திற்கு ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.