நாடுமுழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்திய கர்நாட்டக தேர்தல்கள் ஓய்ந்த பின்னர் எந்த கட்சி ஆட்சியை அமைப்பது என போட்டி நிகழ்ந்து வந்த நிலையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில் பாஜக ஆட்சி போட்டியில் இருந்து பின்வாங்கிக் கொண்டது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்கெடுப்பிற்கு முன்னதாக உருக்கமான உறையினை நிகழ்த்திய முதல்வர் எடியூரப்பா, தனது முதல்வர் பதவியினை ராஜினாமா செய்து ஆட்சிப் போருப்பில் இருந்து விலகிக்கொண்டார்.


இந்த முடிவிற்கு காங்கிரஸ் தலைவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வரும் நிலையில், திமுக-வின் செயல் தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. "உச்சநீதிமன்றத்தின் அதிரடி முடிவால் கர்நாட்டகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.



224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபை தேர்தலில், 222 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றதில், அதிகபட்சமாக பாஜகவுக்கு 104 இடங்கள் கிடைத்தன. காங்கிரசுக்கு 78 இடங்களும், மஜதவுக்கு 37 இடங்களும் கிடைத்தன.


 


தேர்தலுக்கு பிறகு 78 இடங்களில் வென்ற காங்கிரஸ், 38 தொகுதிகளில் வென்ற மஜத உடன் இணைந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆனால் தனிப்பட்ட முறையில் அதிக இடங்களை கைப்பற்றிய பாஜக-வை ஆட்சி அமைக்க வருமாறு கர்நாடகா ஆளுநர் அழைப்பு விடுத்தார்.


இதனையடுத்து எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். மேலும் 15 நாள் அவகாசத்தில் பெருன்பான்மையினை நிறுபிக்க வேண்டும் என்ற நிபந்தனையும் பெற்றார்.


இந்த முடிவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக இருதரப்பு வாதங்களையும் விசாரித்த நீதிபதி இன்று மாலை 4 மணியளவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உத்தரவிட்டார். 


இதனையடுத்து இன்று நம்பிக்கை வாக்கெடுப்பிற்கான ஏற்பாடுகள் நடைப்பெற்ற நிலையில் முதல்வர் எடியூரப்பா தனது பதவியினை ராஜினாமா செய்தார்!