முன்னாள் BSF வீரரின் வேட்பு மனு நிராகரிப்பை எதிர்த்து EC மீது வழக்கு!!
வாரணாசி தொகுதியில் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து EC மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
வாரணாசி தொகுதியில் தேஜ் பகதூர் யாதவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதையடுத்து EC மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு!!
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 7 மாநிலங்களில் 51 தொகுதிகளில் 5ம் கட்ட வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். மூத்த அதிகாரிகள் குறித்தும், அவர்கள் எல்லை பாதுகாப்பு வீரர்களை மனரீதியாக துன்புறுத்துவதாகவும் புகார் கூறினார். நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய தேஜ் பகதூரின் வீடியோக்களில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை எல்லை பாதுகாப்பு படை மறுத்திருந்தது. இதனையடுத்து தேஜ் பகதூர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர் பணியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
இதையடுத்து, ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் உணவின் தரம் குறித்து புகார் கூறியதால் பணிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிட இருப்பதாக தெரிவித்திருந்தார். வாரணாசி தொகுதிக்கு ஏழாவது கட்டமாக மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இந்நிலையில் தேஜ் பகதூர் யாதவை தங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக சமாஜ்வாடி கட்சி கடைசி நேரத்தில் அறிவித்தது. இதையடுத்து வாரணாசி தொகுதியில் கடந்த மாதம் தேஜ் வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் சரியான விவரங்கள் இல்லை என கூறி தேர்தல் ஆணையம் தேஜின் வேட்பு மனுவை நிராகரித்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் கூறிய தேஜ் பகதூர்; ‘வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து போட்டியிடுவது உறுதி. எந்த சூழலிலும் தேர்தலை விட்டு விலகப்போவதில்லை. நிச்சயம் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’ என கூறியிருந்தார். இதையடுத்து, தேஜ் இன்று உச்சநீதிமன்றத்தில், தனது வேட்பு மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து தேர்தல் ஆணையம் மீது வழக்குப்பதிவு செய்துள்ளார்.